ஐ.சி.சி யை விட கோடி கோடி மழையில் மிதக்கவுள்ள பி.சி.சி.ஐ – வெளியான அறிவிப்பு

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற பிரபலமான இருபதுக்கு 20 லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில், 2022ஆம் ஆண்டு மேலும் இரு புதிய அணிகள் சேர்க்கப்படவுள்ள நிலையில் இரு அணிகள் வருகையால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு ஆயிரக்கணக்கான கோடியில் வருமானம் கிடைக்கவுள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் தற்போது 8 அணிகள் மட்டுமே பங்கேற்றுவரும் நிலையில் அடுத்த ஆண்டு அணிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்படவுள்ளன.

இதற்காக குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமமும், மற்றொரு நிறுவனமும் மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய அணிக்கான விண்ணப்பத்துக்கு மட்டும் எந்த நிறுவனம் விண்ணப்பித்தாலும் ரூ.75 கோடி (இந்திய ரூபாய்) வைப்பு செலுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பி.சி.சி.ஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ‘2022ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கூடுதலாக 2 அணிகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான விருப்ப மனு தாக்கல் செய்யும் போது ரூ. 75 கோடி செலுத்த வேண்டும். இரு அணிகளுக்கான அடிப்படை விலை ரூ. 1700 கோடி முதலில் நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டு ரூ. 2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.’

‘இந்த இரு அணிகள் புதிதாக வருவதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும். இந்த இரு அணிகளை வாங்கவும் ஏராளமான புதிய நிறுவனங்கள் விருப்பமாக உள்ளன. பி.சி.சி.ஐ எதிர்பார்ப்பின்படி ரூ.5 ஆயிரம் கோடி உறுதியாகக் கிடைக்கும்.’

‘2022 ஐ.பி.எல் தொடரில் மொத்தமாக 74 போட்டிகள் நடத்தப்பட ஆலோசிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி முதல் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே விருப்ப மனு அளிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்தப் புதிய அணிகள் அகமதாபாத், லக்னோ, புனே ஆகிய நகரங்களை மையமாக வைத்து உருவாக்கப்படலாம்.’ எனத் தெரிவித்தார்.

அதானி குழுமம், ஆர்.பி.ஜி சஞ்சீவ் கோயங்கா குழுமம், டோரன்ட் மருந்து நிறுவனம், புகழ்பெற்ற தனியார் வங்கி ஆகியவை அணியை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இரு அணிகள் புதிதாக வரும்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு ஆயிரக்கணக்கான கோடியில் பணமழை கொட்டும் என்பதில் சந்தேகமில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *