பிரிஸ்பேன் டெஸ்டில் நடராஜனுக்கு வாய்ப்பு இருக்கா ? கசிந்த தகவல்

விளையாட்டு

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே போட்டியான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது என்று சொன்னாலும் இந்திய அணிக்கு அது ஒரு வெற்றியாகவே கருதப்படுகிறது.

இந்திய அணி தோல்வி பெறும் நிலையிலிருந்து போட்டியை சமநிலை செய்தது. இவ்வாறான நிலையில் இந்த குறித்த மூன்றாவது போட்டியில் இந்திய அணியினுடைய மிக முக்கிய இரண்டு வீரர்கள் உபாதைக்கு உள்ளானார்கள். சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இவ்வாறு உபாதைக்கு உள்ளானார்கள்.

உபாதைக்கு உள்ளான ரவீந்திர ஜடேஜா அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள நிலையில் அவர் ஆறு வாரங்களுக்கு இந்திய அணியில் விளையாட மாட்டார். அதாவது எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கு இந்திய அணியில் ஜடேஜாவால் விளையாட முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் ஜஸ்பிரித் பும்ரா 4-வது போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அவர் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.

இந்நிலையில் அவரின் இடத்திற்கு தமிழக வீரரான நடராஜன் விளையாடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற்று முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக பிரகாசித்ததன் இதன்மூலம் இந்திய அணியில் வாய்ப்பினை பெற்றுக் கொண்ட தங்கராசு நடராஜன் விளையாடிய டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அவர் இதுவரையில் 4 சர்வதேச போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வந்த வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவுக்கு உபாதை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்கு நடராஜன் இடம் பிடித்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி அறிமுகம் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறான நிலையில் தற்போது ஜஸ்பிரிட் பும்ரா இல்லாமல் போனால் அவரின் இடத்திற்கு நடராஜன் விளையாடுவது உறுதி என்ற அடிப்படையில் செய்திகள் வெளியாகியிருக்கிறது. மாறாக பும்ரா போட்டியில் விளையாடினால் நடராஜனுக்கு அதிலும் வாய்ப்பு கிடைக்காது என்பதே உறுதியான செய்தியாக இதுவரையில் வெளியாகியிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *