ரசிகர்களின் அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மஹேல ஜெயவர்த்தன.. ஐ.சி.சி கொடுத்த மிகப்பெரிய கௌரவம்..

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் சாதனை படைத்த வீரர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் ஒரு சாதனை வீரர் தான் இலங்கையைச் சேர்ந்த மஹேல ஜெயவர்தன. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக வலம் வந்த மஹேல ஜெயவர்தன கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடி பல சாதனைகளைப் படைத்துள்ளதுடன், அணித் தலைவராகவும் இலங்கை அணிக்கு மிகச் சிறந்த சாதனைகளை படைத்திருக்கிறார்.

கிரிக்கெட் விளையாடிய காலங்களில் கிரிக்கெட் வீரராக பல சாதனைகளை படைத்து வந்த மஹேல ஜெயவர்தன தற்போது பயிற்றுவிப்பாளராக கூட செயல்பட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஆகவும் மஹேல ஜெயவர்தன தற்சமயம் செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறான நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் மஹேல ஜெயவர்தனவுக்கு மிகப்பெரிய ஒரு கௌரவம் கிடைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஆரம்பித்த சிறந்த தந்திரோபாய தலைவருக்கான வாக்கெடுப்பில் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மஹேல ஜெயவர்தன அதிக வாக்குகளை பெற்று கிரிக்கெட் உலகின் தந்திரோபாய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளம் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 4 முன்னாள் வீரர்கள் பங்குபற்றிருந்தனர். இதில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்க் டெய்லர், நியூசிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் பிளமிங், மற்றுமொரு நியூஸிலாந்து வீரரான மார்ட்டின் குரோவ், இலங்கையைச் சேர்ந்த மஹேல ஜயவர்தன ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதில் 10 ஆயிரத்து 521 இரசிகர்களின் வாக்கெடுப்பின் மூலம் 44.9 சதவீத வாக்குகளை பெற்று கொண்ட மஹேல ஜெயவர்தன கிரிக்கெட் உலகின் தந்திரோபாய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 39.9 சதவீத வாக்குகளை பெற்று கொண்ட நியூஸிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீபன் பிளமிங் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *