‘2வது இன்னிங்ஸில் ஆடுகளத்தில் கொஞ்சம் மாற்றம் இருப்பதை கவனிக்க முடிந்தது’ – தோல்விக்கு ஆடுகளத்தை காரணம் கூறும் இந்திய கேப்டன் ரோஹிட்
ஆசியக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பவுலிங் தான் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல ஃபீல்டிங்கின் போது களத்தில் மேற்கொண்ட சில பிழைகளும் தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் தோல்வியின் பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.
‘முதல் இன்னிங்ஸில் நாங்கள் எடுத்த 180 ரன்கள் சிறந்த ஸ்கோர் என நினைக்கிறேன். இந்த ஸ்கோர் எல்லாவிதமான ஆடுகளங்கள் மற்றும் கண்டீஷனிலும் சிறந்தது எனவும் கருதுகிறேன். நெருக்கடி மிக்க இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளத்தில் கொஞ்சம் மாற்றம் இருப்பதை கவனிக்க முடிந்தது.
இந்த போட்டி எங்களுக்கு நல்லதொரு படிப்பினையை கொடுத்தது. இந்த மாதிரியான ஸ்கோரை சேஸ் செய்யும் போது எங்களது மைண்ட் செட் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம். கோலி சிறப்பாக விளையாடி இருந்தார்’ என ரோகித் தெரிவித்தார். இந்திய அணி அடுத்ததாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் நடப்பு ஆசிய கோப்பையின் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்யும்.