‘நானும் தவறு செய்யலாம்.’ அர்ஷ்தீப் சிங் விட்ட கேட்ச் தொடர்பில் விராட் கோஹ்லி ஓபன் டாக்

15ஆவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதின. போட்டியில் ரவி பிஷ்னோய் வீசிய 18ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஆசிப் அலி அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒரு கேட்ச் கொடுத்தார். ஷார்ட் டேர்ட் மேன் திசையில் மிகமிக எளிய கேட்ச்தான். அதனை அர்ஷ்தீப் சிங் பிடிக்கவில்லை. வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஆசிப் அலி, குஷ்டில் இருவரும் சேர்ந்து அடுத்த ஓவரில் புவனேஷ்வர் குமாருக்கு எதிராக 19 ரன்களை சேர்த்தனர். இதனால், கடைசி ஓவரில் 7 ரன்களை மட்டுமே அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. பாகிஸ்தான் வென்றது.

கேட்சை விட்ட அர்ஷ்தீப் சிங்கை, களத்திலேயே ரோஹித் ஷர்மா பயங்கரமாக திட்டினார். இந்நிலையில், போட்டிக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் ஆசிப் அலியின் கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டது குறித்து கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கோலி, இது பெரிய போட்டி, சூழ்நிலைகளும் சற்று இறுக்கமாக இருந்தது. அழுத்தமான சூழ்நிலையின் போது யார் வேண்டுமானலும் தவறு செய்யலாம். மூத்த வீரர்கள் உங்களிடம் வருவார்கள்.. நீங்கள் (இளம் வீரர்கள்) அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்போது தான், அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, நீங்கள் இதுபோன்ற முக்கியமான கேட்ச்களை பிடிக்க முடியும்’ என்றார்.