ஒரு பரிவான புன்னகையும், பணிவு கலந்த எளிமையும், பதட்டமில்லாத தீரமும் இவனது வெற்றியின் விலாசங்களாகும். இலங்கை கிரிக்கெட்டில் என்றுமே மறக்க முடியாத ஒரு தலைவனாய் தசுன் பரிணமிப்பார் என்பது திண்ணம்.
இந்திய அணியுடனான போட்டியில் இலங்கையின் கேப்டன் தசுன் ஷானக்க ஆட்டநாயகன் விருது வென்றார். அவரின் பணிவான நடத்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
15ஆவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, இலங்கையிடமும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று தொடரை விட்டு வெளியேற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கையும், பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியாவும் இன்றைய போட்டியில் மோதின. ஃபைனலுக்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இலங்கையை எதிர்கொண்டது இந்தியா.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 6 ரன்களுக்கு தீக்ஷனாவின் பந்தில் ஆட்டமிழக்க, விராட் கோலி ரன்னே அடிக்காமல் மதுஷங்காவின் பவுலிங்கில் டக் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின் அதிரடியை மேலும் கூட்டிய ரோஹித் சர்மா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவரில் 173 ரன்கள் அடித்தது இந்திய அணி.
174 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்கவீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகிய இருவரும் இணைந்து 97 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி ஆட, அதன்பின்னர் தசுன் ஷனாகா மற்றும் பானுகா ராஜபக்சா ஆகிய இருவரும் பொறுப்புடன் ஆடி கடைசி வரை நின்று இலக்கை அடித்து முடித்து போட்டியை முடித்தனர். கடைசி 2 ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.
19வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 14 ரன்களை வழங்கினார். கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட, அர்ஷ்தீப் சிங் அந்த 7 ரன்களை எளிதாக வழங்காமல் டைட்டாக பந்துவீசினார். எனினும் கடைசி ஓவரின் 5வது பந்தில் இலக்கை எட்டி இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.