அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சுய நினைவுக்கு திரும்பிய ஆஸி. கிரிக்கெட் வீரர் . அவருக்காக நாமும் பிராத்திப்போம்
மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரியான் கேம்பெல் சுய நினைவுக்கு திரும்பியுள்ளார். ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சையில் இருக்கும் அவர் சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக கேம்பெல் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு ஏற்பட்ட பிறகு அவர் ராயல்ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், சுய நினைவுக்கு திரும்பியுள்ள அவர், இன்னும் சிகிச்சையில் இருக்க வேண்டியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. குடும்பத்தினர் கூறும்போது, கேம்பெல் சுயநினைவுக்கு திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். பேசினாலும், சற்று பலவீனமாக இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், விரைவில் முழுமையாக குணமடைவார் என கூறியுள்ளனர்
ரியான் கேம்பெல்லுக்கு 50 வயதாகிறது. கடந்தவாரம் குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருந்தபோது திடீரென நெஞ்சுவலியும், மூச்சுவிடுவதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது. சற்றும் தாமதிக்காத குடும்பத்தினர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். 12 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய அவர், மேற்கு அவுஸ்திரேலியாவுக்காக 98 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் 11 சதங்களுடன் 6009 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சர்வதேச அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 54 ஓட்டங்களும், 3 டி20 போட்டிகளில் 26 ஓட்டங்களும் எடுத்தார். அவர் 2017 ஜனவரியில் நெதர்லாந்தின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.