இந்திய அணியில் மீண்டும் இணைய தமிழக வீரர் நடராஜனுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பும் பறிபோனது ! பி.சி.சி.ஐ தேர்வாளர் புறக்கணிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பிடித்திருக்க வேண்டிய சூழலில் உமேஷ் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கொரோனா பாசிட்டிவ் காரணமாக முகமது ஷமி இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக 34 வயதான உமேஷ் யாதவ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு சில பந்துகளில் போட்டியின் போக்கை மாற்றக்கூடிய தமிழக வீரருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

உமேஷ் யாதவ் விட சிறப்பான ஃபார்மில் இருக்கும் தமிழக வீரர் நடராஜனை பிசிசிஐ தேர்வாளர்கள் புறக்கணித்துள்ளனர். நடராஜன் சிறப்பான ஃபார்மில் தான் இருந்தார். குறைவான போட்டிகளில் விளையாடி இருந்தாலும், சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த ஐபிஎல் சீசனிலும் இவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
நடராஜனைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர். கடந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அவர், சூப்பரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது புருவத்தையும் உயர வைத்தார். இருப்பினும் இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது மீண்டும் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
நடராஜன் இந்தியாவுக்காக 1 டெஸ்ட் போட்டி, 4 டி20 போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 3 விக்கெட்டுகளையும், டி20யில் 7 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்திய அணியில் இருந்து வெளியேறி வருகிறார். அதேசமயம், உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.