சோத்துலயும் (Asia) அடி வாங்கியாச்சி, சேத்துலயும் (India) அடி வாங்கியாச்சி.. இனி என்னதான் செய்ய… – ஆஸி.விடம் அடிவாங்கிய பின்னர் புலம்பும் இந்திய கேப்டன் ரோஹிட்
இந்திய அணி விதித்த 209 ஓட்டங்கள் எனும் பெரிய இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி இந்திய அணியை வெளுத்து வாங்கி வெற்றிபெற்றது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரின் அற்புதமான அரைசதங்கள் மற்றும் சூர்யகுமார் யாதவின் முக்கிய ஆட்டத்தால் இந்தியா 20 ஓவரில் 208-6 ஓட்டங்களை எடுத்தது. 209 ஓட்டங்கள் எனும் பெரிய இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. ஆரோன் பின்ச் – கேமரூன் கிரீன் இணை மிரட்டலாக தொடங்கினர். கிரீன் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தார். அப்படி சொல்வதைவிட, இந்தியாவின் மோசமான பீல்டிங் அவருக்கான வாய்ப்பை அதிகரித்தது.
இந்திய வீரர்கள் அடுத்தடுத்த அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட அதை சரியாக பயன்படுத்தி, அரைசதம் கடந்தார் கிரீன். அவருக்கு ஸ்மித் பக்கபலமாக அமைய, அவுஸ்திரேலியாவின் ரன் ரேட் ஓவருக்கு 10 என்பதை தாண்டிச் சென்றது. இருப்பினும், 11-வது மற்றும் 15-வது ஓவருக்கு இடையில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா மீண்டும் கையில் எடுக்க முயன்றது இறுதியில், அவுஸ்திரேலியாவுக்கு கடைசி 18 பந்துகளில் இன்னும் 40 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
ஆனால், ஆட்டத்தை அப்படியே தன பக்கம் திருப்பிய மேத்யூ வேட் (21 பந்துகளில் 45 ஓட்டங்கள்) அனல் பறக்க விளையாடி அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடித்தந்தார். இந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது ; நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை என்று நினைக்கிறேன். 200 ரன்கள் என்பது ஒரு நல்ல ஸ்கோர், மேலும் களத்தில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தவில்லை.
இது எங்கள் பேட்டர்களின் சிறந்த முயற்சி, ஆனால் பந்துவீச்சாளர்கள் அங்கு இல்லை. இது அதிக ரன்கள் எடுக்கக்கூடிய மைதானம் என்பது எங்களுக்குத் தெரியும். 200 ரன்கள் எடுத்தாலும் நிதானமாக இருக்க முடியாது. நாங்கள் விக்கெட்டுகளை எடுத்தோம், ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். அவர்கள் சில அசாதாரண ஷாட்களை விளையாடினர். என கூறினார்.