”அன்று ஸ்ரீ லங்காவும் இதே ஓவர்ல தான் பொளந்தானுங்க, இன்னைக்கு ஆஸி.வும் இதே ஓவர்ல தான் பொளக்கானுங்க.. இந்திய அணிக்கு இருக்கிற ஒரே பிரச்சின இதுதான்” – கவாஸ்கர் ஓபன் டாக்

ஆஸி. அணியுடனான முதல் போட்டியில் இந்திய அணியின் முக்கியமான ஃபாஸ்ட் பவுலர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் இணைந்து 8 ஓவரில் 101 ரன்களை வாரி வழங்கினர். புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 52 ரன்களும், ஹர்ஷல் படேல் 4 ஓவரில் 49 ரன்களும் வழங்கிய நிலையில் இருவருமே விக்கெட் வீழ்த்தவில்லை. 19வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 16 ரன்களை வழங்கினார். அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட போட்டி முடிந்துவிட்டது. இதையே தான் புவனேஷ்வர் குமார் தொடர்ச்சியாக செய்துவருகிறார். அது இந்திய அணிக்கு கவலையளிக்கிறது.

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான பவுலராக புவனேஷ்வர் குமார் பார்க்கப்படும் நிலையில், டெத் ஓவர்களில் அவரது தொடர்ச்சியான மோசமான பவுலிங் இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், மொஹாலியில் பனியெல்லாம் கிடையாது. எனவே அதை காரணமாக சொல்லமுடியாது. இந்திய பவுலர்கள் சரியாக பந்துவீசவில்லை. 19வது ஓவர் தான் இந்திய அணிக்கு தொடர்ந்து பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது.
புவனேஷ்வர் குமார் ஒவ்வொரு முறையும் 19வது ஓவரில் தொடர்ச்சியாக ரன்களை வாரி வழங்குகிறார். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், புவனேஷ்வர் குமார் கடைசியாக 3முறை வீசிய 19வது ஓவரில் மொத்தம் 18 பந்தில் 49 ரன்களை வழங்கியிருக்கிறார். ஒரு பந்துக்கு 3 ரன் வீதம் வழங்கியிருக்கிறார். அவரது அனுபவத்திற்கு இது மிக அதிகம். இதுதான் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக இருக்கிறது என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.