ஆசியாவை விடுங்க, ”இந்திய அணி உலக தரம்வாய்ந்த ஒரு அணியாகும்” – ஆஸி. கேப்டன் புகழாரம்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணியுடன் விளையாடியது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றன. இந்தச் சூழலில் தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் இந்தியா 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள சூழலில் அந்த அணியை வீழ்த்தியது இந்தியாவுக்கு உற்சாகத்தை கொடுக்குமென்று கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய ஆரோன் பின்ச், ‘இந்தியாவுக்கு எதிரான தொடர் நல்ல தொடராக இருந்தது. இது போதுமான ஸ்கோர் என்று நினைத்தோம். கொஞ்சம் பனியின் தாக்கம் இருந்தது.
இதனால் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். சில சமயங்களில் எங்களது திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டோம். உலகத்தரம் வாய்ந்த அணிக்கு எதிராக மூன்று ஆட்டங்களில் விளையாடியது சிறப்பானதாக இருந்தது’ என்றார்.