அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் இந்திய ஸ்பினர்களின் பந்துவீச்சு வேற லெவலில் இருக்கும் – முரளிதரன் ஓபன் டாக்
2022ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இதே கருத்தைத்தான் கூறியிருக்கின்றனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், இம்முறை டி20 கிண்ணத்தை வெல்லும் அணி தொடர்பில் எதிர்வுகூறியுள்ளார். இந்த நிலையில் டி20 உலகக்கிண்ணம் தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் போட்டியை மாற்றக்கூடியவர்கள் என்ற விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
‘இந்தியாவின் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் இதுவொரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். அவுஸ்திரேலியாவில் அதிகம் சுழல் இருக்காது. ஆனால், இந்த உலகக்கிண்ணத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவர். அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்துவீசுவதற்கு இந்தியாவுக்கு போதுமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என நான் நினைக்கிறேன்’ எனக் கூறினார்.
அதேநேரம் இந்த வு20 உலகக்கிண்ணத்தை பொருத்தவரை எந்த அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பது தொடர்பிலும் கூறியுள்ளார். ‘கிண்ணத்தை எந்த அணியும் வெல்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம் அணிகள் கடினமாக மோதுவதற்கு தயாராக உள்ளன. ஆனால், அவுஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவதால், அவர்களுக்கு சற்று அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன’ என சுட்டிக்காட்டியுள்ளார்.