‘டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் போட்டி நடைபெறும் மெல்பர்ன் மைதானம் என்னுடைய சொந்த மைதானம் போன்றது. இந்தியாவை தோற்கடிக்க திட்டம் ரெடி’ – வெறித்தனமாக பேசிய பாக். ஸ்பீட் ஸ்டார்

2022ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹரீஸ் ராஃப் இந்தியா எதிர் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி குறித்த தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறார். ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டிகள் எப்போதுமே பெரும் அழுத்தம் மிக்கவைதான். கடந்த உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக மோதும்போது அழுத்தத்திற்குள்ளானேன். ஆனால், ஆசியக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரானப் போட்டிகளில் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. என்னுடைய முழுத்திறனையும் வெளிக்காட்ட வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது.

என்னுடைய முழுத்திறனையும் வெளிப்படுத்தினேன் எனில் இந்திய பேட்டர்களால் அத்தனை சுலபமாக என்னை எதிர்கொள்ள முடியாது. வரவிருக்கும் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டி நடைபெற இருக்கும் மெல்பர்ன் மைதானம் என்னுடைய சொந்த மைதானம் போன்றது. மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஆடியிருக்கிறேன். அங்குள்ள களச்சூழல் என்னவென்பது எனக்கு தெரியும். இந்தியாவிற்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கான திட்டங்களை ஏற்கெனவே தயாரிக்கத் தொடங்கிவிட்டேன்.’ என ஹாரிஸ் ராஃப் கூறியிருக்கிறார்.

கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றிருந்தது. சமீபத்தில், நடந்த ஆசியக்கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோற்றிருந்தது. சமீபகாலமாக பாகிஸ்தானுக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் சறுக்கல்களிலிருந்து மீளும் வகையில் அக்டோபர் 23 போட்டியை வெல்ல வேண்டும் என்பது இந்திய அணியின் எண்ணம். பாகிஸ்தான் பௌலர்களின் சவாலைத் தாண்டி இந்திய அணியின் எண்ணம் ஈடேறுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *