‘இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே டி20 உலகக்கோப்பைக்கு இப்படி ஒரு அணி தெரிவாகவில்லை’ – பெருமையுடன் பேசிய கேப்டன் தசுன்

2022ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் உலகக்கிண்ணத்தில் அணியின் பிரகாசிப்புகளில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக இருப்பர் என இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார். அதேநேரம், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு குழாத்தில் மணிக்கு 140 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் பந்துவீசக்கூடியவர்கள் மூவர் இருப்பது அணிக்கு மேலும் பலம் கொடுக்கும் என குறிப்பிட்டார்.

எமது கிரிக்கெட் வரலாற்றில் இவ்வாறு மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரே குழாத்தில் இருந்தது இல்லை. அதிகபட்சமாக இரண்டு வீரர்கள் மாத்திரம் இருந்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களின் திறமைகள் மற்றும் பந்துவீச்சு மாற்றங்களுடன் இந்த உலகக்கிண்ணத்தில் சிறந்த விடயத்தை செய்ய முடியும் என நினைக்கிறேன்’ என்றார். அதேநேரம் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் உபாதைகளுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், துஷ்மந்த சமீர ஆசியக்கிண்ணத்தை தவறவிட்டதுடன், லஹிரு குமார கடந்த மார்ச் மாதத்துக்கு பின்னர் போட்டிகளில் விளையாடவில்லை.
இந்தநிலையில் இவர்கள் இருவரும் சிறந்த உடற்தகுதியுடன் வு20 உலகக்கிண்ணத்தில் விளையாட தயாராக இருப்பதாக மேலும் ஷானக சுட்டிக்காட்டினார். ‘துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார எம்முடைய பயிற்சி முகாமில் இணைந்திருந்தனர். அவர்கள் தங்களுடைய 4 ஓவர்களையும் வீசியிருந்தனர். அவர்கள் சிறப்பாக பந்துவீசினர். எனவே, உலகக்கிண்ணத்துக்கு அவர்கள் தயாராக உள்ளனர்’ என்றார்.