”ஆரம்ப வீரர்கள் ஓட்டங்களை சேர்க்க தவறினால் மிடில் ஆர்டர் ஒருவிதமான அழுத்தத்திற்கு சென்று விடுகிறது. தேர்வுக்குழுவினர் அதை அறிந்தும் எந்த மாற்றமும் செய்யாதது அதிர்ச்சிதான்” – அக்தார் கவலை
ஆஸி. வில் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறும் என அஞ்சுவதாக பாக். அணியின் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த நாட்டில் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-4 என இழந்தது. உலகக்கிண்ண தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி இந்தத் தொடரை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், இந்தத் தொடரின் முடிவு பாகிஸ்தானுக்கு சங்கடம் கொடுக்கும் வகையில் அமைந்தது.
டி20 உலகக்கிண்ணம் தொடர்பில் அக்தர் கூறுகையில், ‘பாகிஸ்தான் அணி டி20 உலகக்கிண்ண தொடரில் முதல் சுற்றோடு நடையை கட்டும் என தோன்றுகிறது. அதை எண்ணி நான் அஞ்சுகிறேன். அணியின் மிடில் ஆர்டர் சிறப்பானதாக இல்லை. ஆரம்ப வீரர்கள் ஓட்டங்களை சேர்க்க தவறினால் மிடில் ஆர்டர் ஒருவிதமான அழுத்தத்திற்கு சென்று விடுகிறது. கிண்ணத்தை வெல்ல வேண்டும் என எண்ணும் அணி இப்படி செயற்படக் கூடாது. எனக்கு அதில் வருத்தம்தான். அணியில் சிக்கலே அதுதான். தேர்வுக்குழுவினர் அதை அறிந்தும் எந்த மாற்றமும் செய்யாதது அதிர்ச்சிதான்’ என தெரிவித்துள்ளார்.