”கார்த்திக் வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்” டி20 உலகக் கோப்பையில் தமிழக வீரர் கார்த்திக் பிளேயிங் விளையாடுவது உறுதி – பெருமையுடன் சொன்ன கோச் டிராவிட்
இந்திய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட இருபக்கு 20 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி ஆறுதல் வெற்றிபெற இந்திய அணி தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவதும், இறுதியுமான போட்டி நேற்று முன்தினம் இந்தூரில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ரிலீ ரோசோவ்வின் அதிரடி சதத்துடன் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை குவித்தது.
இதையடுத்து 228 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 18.3 ஓவர் முடிவில் 178 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற இந்திய அணி தொடரை வென்றது. எப்போதுமே தினேஷ் கார்த்திக் கடைசி சில பந்துகள் இருக்கும்போதுதான் களமிறக்கப்படுவார். 12-13ஆவது ஓவர்களில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அவருக்கு அடுத்து இருக்கும் பேட்டர்கள்தான் களமிறங்குவது வழக்கம்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் 4ஆவது இடத்தில் களமிறக்கப்பட்டார். அதுவும் 1.5ஆவது ஓவரிலேயே களத்திற்குள் வந்துவிட்டார். பெரிய ஸ்கோர் போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பினிஷிங் ரோல்தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து, இப்போட்டி முடிந்தப் பிறகு ராகுல் டிராவிட் விளக்கினார்.
அதில், ”தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோருக்கு சரியான பேட்டிங் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தன. 6ஆவது இடத்தில் களமிறங்கினால் 5-10 பந்துகள்தான் விளையாட கிடைக்கும். இதனால், எப்போதுமே அழுத்தங்களுடன் விளையாட வேண்டிய நிலைதான் இருக்கும். அந்த நிலையை மாற்றத்தான் இன்று துவக்கத்திலேயே இருவருக்கும் வாய்ப்பு கொடுத்தோம். இதன்மூலம், அவர்களுக்கு களத்தில் அதிக நேரம் இருக்க நேரம் கிடைக்கும், மன உறுதியும் நன்றாக இருக்கும் என நினைத்தோம். தினேஷ் கார்த்திக் வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்” எனக் கூறினார். இதன்மூலம் தினேஷ் கார்த்திக்கிற்கு டி20 உலகக் கோப்பை லெவன் அணியில் வாய்ப்பு கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக கருதப்படுகிறது.