நான் ஒருபோதும் புள்ளி விபரங்களை பார்ப்பதில்லை. ஆண்டில் 50 சிக்ஸர்களை அடித்தது தெரியுமா என நண்பர்கள் வாட்ஸ்ஆப்பில் கேட்டனர். – ஓபனாக கூறிய SKY

இந்திய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட இருபக்கு 20 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி ஆறுதல் வெற்றிபெற இந்திய அணி தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவதும், இறுதியுமான போட்டி நேற்று முன்தினம் இந்தூரில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ரிலீ ரோசோவ்வின் அதிரடி சதத்துடன் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை குவித்தது.

இதையடுத்து 228 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 18.3 ஓவர் முடிவில் 178 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற இந்திய அணி தொடரை வென்றது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் 119 ரன்கள் குவித்து இரண்டு அரைசதங்கள் அடித்தார். அணியும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய சூர்யகுமார் யாதவ், நான் ஒரு புள்ளிவிவரங்களை பார்ப்பதில்லை, ஆனால் என் நண்பர்கள் எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புகிறார்கள். ஆண்டில் 50 சிக்ஸர்களை அடித்தது தெரியுமா என்று கேட்டனர் என கூறினார். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், நான் இன்னும் ஆஸ்திரேலியாவைப் பற்றி யோசிக்கவில்லை, ஆனால் இது ஒரு சவாலாக இருக்கிறது. ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.