“உலகின் 2ஆம் நிலை பவுலர் அஸ்வினை டெஸ்ட் அணியில் நீக்கும்போதுஇ முதல் நிலை வீரரான பேட்ஸ்மேனையும் நீக்கலாம்.” – அஸ்வினுடன் ஒப்பிட்டு கோலியை விளாசிய ஜாம்பவான் கபில்

டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 450 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாடும் லெவனில் இருந்து நீக்கும்போது, நீண்ட காலமாக பேட்டிங்கில் தடுமாறி வரும் விராட் கோஹ்லி டி20 போட்டியில் இன்றியமையாதவர் அல்ல என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த கபில் தேவ் கூறும்போது,

‘தற்போது டி20 போட்டியில் விளையாடும் லெவனில் விராட் கோஹ்லியை வெளியே அமர வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உலகின் 2ஆம் நிலை பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினை டெஸ்ட் அணியில் நீக்கும்போது, முதல் நிலை வீரரான பேட்ஸ்மேனையும் நீக்கலாம். கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்த்தது போன்ற உயர்மட்ட பேட்டிங் தற்போது விராட் கோஹ்லியிடம் இல்லை. அவர் சிறப்பாக செயற்படாத பட்சத்தில் திறமையான இளம் வீரர்களை அணியில் விலக்கி வைக்க முடியாது.’
‘அணியில் ஆரோக்கியமான போட்டியை நான் விரும்புகிறேன். இளம் வீரர்கள் முயற்சி செய்து விராட் கோஹ்லியை விஞ்ச வேண்டும். ஒரு பெரிய வீரரை (விராட் கோஹ்லி) தேர்வு செய்யவில்லை என்றால் அது அவர், சிறப்பாக செயல்படவில்லை என்பதே காரணமாக இருக்கும். தற்போதைய பார்மை கருத்தில் கொண்டே விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். செல்வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது’ என்றார்.