‘பும்ராவை போல் இன்னும் அதிகப்படியான போட்டியில் இவர் விளையாடியிருந்தால் பும்ராவை மிஞ்சியிருப்பார்’ – பாக். இளம் பவுலரை புகழ்ந்து பேசிய சல்மான் பட்

ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற அபார சாதனையை பும்ரா படைத்தார். பொதுவாகவே பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் பிறந்த சொந்த மண்ணில் சிறப்பாகவும் அறியாத வெளிநாட்டு மண்ணில் தடுமாறுவார்கள். அதனால் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படுபவரையே உலகத்தரம் வாய்ந்த பவுலர் என்று வல்லுனர்கள் மதிப்பிடுவார்கள். அந்த வகையில் சொந்த மண்ணை விட வெளிநாட்டு மண்ணில் இருமடங்கு அபாரமாக செயல்பட்டு ஜஸ்பிரித் பும்ரா தனது வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார்.

இந்நிலையில் இளம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாகின் அப்ரிடி ஜஸ்பிரித் பும்ராவுக்கு கொஞ்சமும் குறைந்தவர் அல்ல என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் தாமாக வந்து கருத்து கூறியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. ‘ஷாஹீன் அப்ரிடி அவ்வளவு கிரிக்கெட் விளையாடியதில்லை என்றாலும் அனைவருக்கும் மத்தியில் அவர் சிறந்தவராக உள்ளார். அவர் பும்ராவுக்கு கொஞ்சமும் குறைந்தவர் அல்ல. சொல்லப்போனால் அனுபவமுள்ள சாஹீன் இன்னும் நல்ல நிலைமைக்கு வருவார். அவரிடமுள்ள வேகம் அவருக்கு வித்தியாசமான ஆங்கிளை வழங்குகிறது.
பும்ரா மற்றும் ஷாஹீன் ஆகிய இருவருமே உலகின் மிகச் சிறந்தவர்கள் என்பதால் அவர்கள் பந்து வீசுவதை பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவமாகும். புதிய பந்தில் அவர்கள் சிறப்பாக பந்து வீசுவது எப்போது வேண்டுமானாலும் விக்கெட் வீழ்த்தப்படலாம் என்று உணர்த்துகிறது. உலகின் வேறு எந்த பவுலரை பார்க்கும்போது இந்த உணர்வு உங்களுக்கு ஏற்படாது’ என்று கூறினார். கடந்த 2018இல் அறிமுகமாகி இதுவரை 96 போட்டிகளில் 204 விக்கெட்டுகளை எடுத்துள்ள சாகின் அப்ரிடி 2021-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை வென்றதால் அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் இப்படி அவரை உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக போற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் 2016இல் அறிமுகமாகி இதுவரை 159 போட்டிகளில் 316 விக்கெட்டுகளை எடுத்துள்ள பும்ராவை போல் இன்னும் அதிகப்படியான போட்டியில் சாகின் அப்ரிடி விளையாடியிருந்தால் பும்ராவை மிஞ்சியிருப்பார் என்றும் சல்மான் பட் கூறியுள்ளார். ’20 வயதுடையை ஒருவர் இந்த அளவுக்கு அபாரமாக செயல்படுவது சுலபமான விஷயமல்ல. இந்த இருவருமே சிறப்பானவர்கள். இதில் சற்று அதிகப்படியான போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள பும்ராவுடன் அவரை ஒப்பிடவில்லை. பும்ரா நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார், ஷாஹீன் அந்த அளவுக்கான போட்டிகளில் விளையாடவில்லை’ என்று கூறினார்.