IPL 2023 – பொலார்டுக்கு பதில் ஆஸி. ஆல்ரவுண்டர்; மும்பை இந்தியன்ஸ் அதிரடி திட்டம்!
மும்பை : IPL 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடருக்கான ஆரம்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்கான IPL மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களை அதற்கு முன் மாற்றி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
எந்த வீரர்களை தக்க வைக்கிறோம், எந்த வீரர்களை விடுவிக்கிறோம் என்பதற்கான பட்டியலை BCCIயிடம் இன்று மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும்.
புதிய திட்டம்
இந்த நிலையில், IPL மினி ஏலத்திற்கு முன்பே பலமான அணியை கட்டமைக்கும் பணியை 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியுள்ளது. இதற்கு காரணம். கடந்த சீசனில் மும்பை அணி கடைசி இடத்தை பிடித்தது. இதனால் இம்முறை பலமான அணியை களமிறக்கி மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலமான அணி
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே இஷான் கிஷன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், டிவால்ட் பிராவீஸ், டிம் டேவிட், திலக் வர்மா, பும்ரா மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், மும்பை அணி ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் பெகுரண்டார்பை பெங்களூரு அணியிடம் வாங்கி தனது பேட்டிங் பலத்தை அதிகரித்துள்ளது.
பொலார்ட் விடுவிப்பு?
இதே போன்று மும்பை அணியின் நட்சத்திர வீரரான பொலார்டை விடுவிக்க எம்.ஐ. நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் கடந்த 12 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் பொலார்டை கடந்த ஆண்டு 6 கோடி ரூபாய் கொடுத்து அந்த அணி தக்க வைத்து கொண்டது.
கேம்ரான் கிரீன்
எனினும் கடந்த ஆண்டு அவர் 11 போட்டியில் விளையாடி 144 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது அணியில் பிராவீஸ், டிம் டேவிட் போன்ற அதிரடி வீரர்கள் இடம்பெற்றுள்ளதால், மும்பை அணி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கேமிரான் கிரினை கைப்பற்ற முடிவு எடுத்துள்ளது. கடந்த இந்திய தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என கலக்கிய கிரீன், பொலார்ட் இடத்தை நிரப்பினால் மும்பை இந்தியன்ஸ் பலம் பல மடங்கு அதிகரித்துவிடும்.