வங்கதேச தொடருக்கு முன் இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி! அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் அவுட்

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி (Team India) டிசம்பர் 4 ஆம் தேதி முதல் வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் (IND vs BAN) விளையாடுகிறது. ஆனால் இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இந்திய அணி நாளை முதல் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் டாக்காவில் நாளை தொடங்குகிறது. ஆனால் தொடர் தொடங்கும் முன்பே இந்திய அணி அதிர்ச்சியை சந்தித்தது. அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான முகமது ஷமி தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் தொடரில் இருந்து விலகுவார் என BCCI வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் இந்த தொடரில் ஷமி பங்கேற்க மாட்டார் என BCCI இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஷமியின் மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. T20 உலகக் கோப்பையில் இருந்து இந்தியா திரும்பிய பிறகு, பயிற்சியின் போது ஷமிக்கு காயம் ஏற்பட்டது. ஷமிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் தொடர் மட்டுமின்றி டெஸ்ட் தொடரிலும் அவர் விலக வாய்ப்புள்ளது.

முகமது ஷமி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டுள்ளார், இங்குள்ள அறிக்கையின் அடிப்படையில், அவர் டெஸ்ட் தொடரில் இணைவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது தவிர, ஷமியின் காயத்தின் அளவு இன்னும் அறியப்படவில்லை என்றும், அவர் குணமடையும் நேரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, ஷமி இல்லாத நிலையில், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் வங்கதேச ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஷமிக்கு பதிலாக குல்தீப் சென் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
வங்கதேச ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், தீபக் சாஹர்.