Cricket

இந்திய அணியுடனான தொடரில் நட்சத்திர வீரர்களான ஹசரங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு புதிய பொறுப்பை வழங்கிய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20 தொடர்களுக்கான இலங்கை குழாம் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 20 பேர்கொண்ட குழாத்தில் நுவான் துஷார, அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருடன் ஜெப்ரி வெண்டர்சே, உபாதைக்கு முகங்கொடுத்திருந்த டில்ஷான் மதுசங்க ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதேநேரம் மோசமான பிரகாசிப்புகள் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த சாமிக்க கருணாரத்ன மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், தினேஷ் சந்திமால் மற்றும் தனன்ஜய லக்ஷான் ஆகியோர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அணியின் தலைவராக தொடர்ந்தும் தசுன் ஷானக செயற்படவுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான உப தலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன், T20 அணியின் உப தலைவராக வனிந்து ஹஸரங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதுமாத்திரமின்றி அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் பானுக ராஜபக்ஷ மற்றும் நுவான் துஷார ஆகியோர் T20 போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளதுடன், நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளனர்.

இலங்கை குழாம்
தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ் (ஒருநாள் போட்டிகளுக்கான உப தலைவர்), பானுக ராஜபக்ஷ (வு20ஐ போட்டிகளுக்கு மாத்திரம்), சரித் அசலங்க, தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க (வு20ஐ போட்டிகளுக்கான உப தலைவர்), அஷேன் பண்டார, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே (ஒருநாள் போட்டிகளுக்கு மாத்திரம்), சாமிக்க கருணாரத்ன, டில்ஷான் மதுசங்க, கசுன் ராஜித, நுவனிந்து பெர்னாண்டோ (ஒருநாள் போட்டிகளுக்கு மாத்திரம்), துனித் வெல்லாலகே, பிரமோத் மதுசான், லஹிரு குமார, நுவான் துஷார (வு20ஐ போட்டிகளுக்கு மாத்திரம்).

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button