இதுவல்லவா மரண பினிஷிங்… இந்திய அணியில் தலைவன் இடத்தை நிரப்ப வந்த தமிழன். என்னடா பெரிய ரிஷப் பந்த், டி.கே தெரியுமா ?

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிரட்டல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸின் பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 64 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 41 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 190 ரன்கள் குவித்தது. இதன்பின் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான கெய்ல் மெயர்ஸ் (15) மற்றும் ப்ரூக்ஸ் (20) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் இந்திய அணியின் அசத்தல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி பெரிதாக ரன்னும் குவிக்காததால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்த விண்டீஸ் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்தநிலையில், இந்த போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, விண்டீஸ் அணியுடனான நடப்பு கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பதிவு செய்ததது இந்திய அணி.
இந்தநிலையில், இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அசத்திய தினேஷ் கார்த்திக்கிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கை வியந்து பாராட்டி வருகின்றனர்.