இலங்கை அணிக்கு அடித்த அதிஸ்டம்… ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இலங்கை, ஆஸி. அணிகள் மோத வாய்ப்பு
ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்ற அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ஓட்டங்களினால் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி மூன்றாமிடத்திற்கு முன்னேறியது.
3 போட்டிகள் கொண்ட குறித்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி தோல்வியை தழுவியிருந்தது. இந்நிலையில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகிய இரண்டாவது டெஸ்ட் போட்டி 30 நிறைவுக்கு வந்த நிலையில் தென்னாபிரிக்க அணி அதிலும் தோல்வியை சந்தித்தது.
இதன் காரணமாக தென்னாபிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் 50 வெற்றி சதவீதத்தை பெற, 53.33 வெற்றி சதவீதத்தை கொண்டுள்ள இலங்கை அணி மூன்றாமிடத்திற்கு முன்னேறியது. ஆஸி. அணி 78.57 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்திலும், இந்திய அணி 58.93 வெற்றி சதவீதத்துடன் இரண்டாமிடத்திலும் காணப்படுகின்றன. இலங்கை அணிக்கு நியூசிலாந்து அணியுடன் இரு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் அதில் வெற்றிபெற்றால் முதல் இரு இடங்களுக்குள் நுழைந்து டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும் வாய்ப்பை பெறலாம்.