‘ஸ்பின் என்பது காலியாகிவிட்டது, ஒருநாள் போட்டிகளை பார்ப்பதையே நிறுத்தி விட்டேன், டி.வியை ஆஃப் செய்து விடுவேன்’ – மனம் திறந்த அஸ்வின்

2011-ம் ஆண்டு முதலே இருமுனைகளிலும் இரு பந்துகள் பயன்படுத்தப்படுகிறது, இதனால் ஒருநாள் கிரிக்கெட்டின் சுவாரஸ்யம் குன்றியது, காரணம், ஸ்பின் என்பது காலியாகிவிட்டது, ரிவர்ஸ் ஸ்விங் என்ற கலை ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து காணாமல் போய் டி20-யின் நீட்சியாகி விட்டது என்கிறார் ரவி அஸ்வின். இது தொடர்பாகக் கூறும்போது, ‘நான் ஒரு கட்டத்துக்கு மேல் ஒருநாள் கிரிக்கெட்டை பார்ப்பதையே நிறுத்தி விட்டேன், தொலைக்காட்சியை ஆஃப் செய்து விடுவேன். ஒருநாள் கிரிக்கெட்டுக்கென்றேவிருக்கும் திடீர் மாற்றங்கள், திருப்பு முனைகள் காணாமல் போய் விட்டது. அது கிரிக்கெட்டாக இல்லை, டி20-யின் நீட்சியாக உள்ளது.

இருமுனைகளிலும் இருவேறு பந்துகள் வீசப்படுவது நிறுத்தப்பட்டு ஒரே பந்தில் ஒரு போட்டி முழுதும் ஆடும் முறை திரும்பினால்தான் சுவாரஸ்யமாக இருக்கும், ஸ்பின்னர்களுக்கும் வாய்ப்பு இருக்கும். ஸ்பின்னர்கள் 30-35 ஓவர்களுக்குப் பிறகும் வீச முடியும். ரிவர்ஸ் ஸ்விங் ஒருநாள் போட்டியில் மிக முக்கியம். ஒருநாள் கிரிக்கெட்டின் அழகே அதன் திமிறல்களும், திருப்பங்களும்தான். சில வேளைகளில் பேட்டர்கள் நேரம் எடுத்துக் கொண்டு ஆடி ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு செல்லுதலும் ரிவர்ஸ் ஸ்விங்கும் அழகு.
ஒரு பந்தில் பவுலிங் போட்ட போதெல்லாம் 60 பந்துகளில் ஒரு அணியின் வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்படுகிறது 7 விக்கெட்டுகள் கையில் இருக்கின்றன என்றாலும் பவுலிங் அணிக்கு ஒரு வெற்றி வாய்ப்பை நல்க முடியும், ஆனால் இப்போது அது போய் விட்டது. இனி அது நடக்காது.’ என அஸ்வின் தெரிவித்தார்.