‘சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக இலங்கை அணி தன்னை நிலைநிறுத்தியுள்ளது.’ – ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்
திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சிறப்பான நிலையில் இருப்பதாக அவுஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இலங்கை அணி, டெஸ்ட் தொடரை சமன் செய்தது. அதிலும் குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 151 ஓட்டங்களில் சுருட்டி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்பியுள்ள இலங்கை அணி, சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங் இலங்கை அணி குறித்து கூறுகையில், ‘சொந்த மண்ணில் வீழ்த்த கடினமான அணியாக இலங்கை இருப்பதை நாங்கள் பார்த்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட்டில் ஒரு சிறிய இருள் படர்ந்திருந்தது. ஆனால், அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த டெஸ்டில் சிறந்த அவுஸ்திரேலிய அணியை தங்கள் இடத்திலேயே வீழ்த்தினர். எனவே, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அவர்கள் முன்னோக்கி செல்வதற்கு நிறைய நல்ல மற்றும் சாதகமான அறிகுறிகள் உள்ளன.
அதேபோல், இலங்கை அணியைப் போலவே சொந்த மண்ணில் தோற்கடிக்க கடினமான அணி தென் ஆப்பிரிக்கா ஆகும். உள்நாட்டில் அவர்களின் சாதனை முற்றிலும் சிறப்பானது’ என தெரிவித்துள்ளார்.