‘என்னோட வாய்ப்பை நானாக கெடுத்துக்கொண்டேன். சில வருடங்களுக்கு முன்பே நான் இதை செய்திக்கலாம்’ – மனம் வருந்தும் தமிழக வீரர் கார்த்திக்

2019ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 15ஆவது சீசனில் பெஸ்ட் பினிஷர் என்ற புதிய அவதாரத்தை எடுத்து, மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட அவர், சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் 19 பந்துகளில் 41 ரன்களை குவித்து, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இதனால் ஆகஸ்ட் 27 ஆரம்பமாகும் ஆசியக் கோப்பையிலும், அக்டோபர் இறுதியில் ஆரம்பமாகும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் சேர்க்கப்படுவது நிச்சயம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள தினேஷ் கார்த்திக், என்னோட வாய்ப்பை நானாக கெடுத்துக்கொண்டேன் எனப் பேசியுள்ளார். ‘இந்திய அணிக்கு திரும்புவதற்காக, ஐபிஎல் 15ஆவது சீசனுக்கு முன்பே பவர் ஹிட்டிங் தொடர்பாக பயிற்சி மேற்கொண்டேன்.
மிகவும் தீவிரமாகத்தான் இதனை செய்தேன். இந்த பயிற்சியை சில வருடங்களுக்கு முன்பே நான் செய்திருந்தால், தொடர்ந்து வாய்ப்பு கிடைத்திருக்கும். பரவாயில்லை, தற்போது இதனை சிறப்பாக செய்வதில் மகிழ்ச்சிதான்’ எனக் கூறினார். மேலும் பேசிய இவர், ‘எனக்கு பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்து தொடர்ந்து ஆதரவு கிடைத்து வந்தது. அவர்கள் நம்பிக்கை வைத்து சேர்த்தார்கள். அதற்கான பலனை நான் தந்துகொண்டிருக்கிறேன். கேப்டன், கோச் என அனைவரும் எனக்கு தொடர்ந்து ஆதரவராக இருக்கிறார்கள். இந்த விஷயமும், நான் சிறப்பாக விளையாட முக்கிய காரணமாகும்’ எனத் தெரிவித்தார்.