‘முன்பெல்லாம் நண்பர்களாக இருந்தார்கள்; இப்போது..’ – இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் குறித்து அஸ்வின்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, கோப்பையை தட்டிச் சென்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் எடுக்கப்படாதது கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியது. முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதல் ரசிகர்கள் வரை, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டை சாடினர்.

இந்த போட்டிக்குப் பின்பு தற்போது அஸ்வின், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில், திண்டுக்கல் அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலான திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி, இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் குறித்து பேசியுள்ளார். அதில், “எல்லோருமே சக ஊழியர்களாக இருக்கும் காலம் இது. ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடும் போது, அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்தார்கள். ஆனால், இப்போது சக ஊழியர்கள் போன்று, அதாவது உடன் வேலை பார்க்கும் ஒருவரைப் போல மற்ற வீரர்களுடன் பழகி வருகிறார்கள். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது; என்னவெனில், வீரர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ளவும், நமது வலது அல்லது இடது பக்கம் அமர்ந்திருக்கும் மற்றொரு நபரை விட முன்னேறவும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில், கிரிக்கெட்டை பற்றி நீங்கள் பகிர்ந்து கொள்ளும்போதுதான் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மற்றொரு நபரின் நுட்பத்தையும் மற்றொரு நபரின் பயணத்தையும் நீங்கள் புரிந்து கொள்ளும்போது அது சிறப்பாகிறது. உங்கள் உதவிக்கு யாரும் வர மாட்டார்கள். இது ஒரு தனிமையான பயணம். நிச்சயமாக, நீங்கள் விரும்பும் எதிலும் நிபுணத்துவம் அடைய பயிற்சியாளரை அமர்த்தி, அதற்கு பணம் செலவு செய்து பயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால், சில சமயங்களில் கிரிக்கெட் மிகவும் சுயமாக கற்றுக் கொள்ளப்பட்ட விளையாட்டு என்பதை மறந்து விடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *