Cricket

நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! ஆசிய கோப்பைக்கு முன்பாகவே களம்காண்கிறார் பும்ரா!

காயங்களால் அவதிப்படும் இந்திய வீரர்கள் என்ற பட்டியல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அந்த வரிசையில் ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் என்ற சொல்லிக்கொண்டே போகலாம். இந்திய அணியின் முக்கியவீரர்களாக பார்க்கப்படும் இவர்கள் அணியில் இல்லாதது பெரும் பின்னடைவாகவே இருந்துவருகிறது. அடுத்தடுத்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை தொடர் என முக்கியமான தொடர்கள் வரவிருக்கும் நிலையில், முக்கியமான வீரர்கள் அணிக்குள் இருக்க வேண்டியது கட்டாயமாக இருந்துவருகிறது.

உலகக்கோப்பை தொடரில் பங்குபெற்று விளையாட வேண்டும் என்றால் அவர்கள் குறைந்தது 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பாகவே இந்திய அணியில் விளையாட வேண்டியது கட்டாயம். இல்லையேல் அவர்கள் அணியில் இருந்தும் பிரயோஜனம் இல்லாத நிலையே இருந்துவரும். இந்நிலையில் ஆசியக்கோப்பை தொடரில் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அணிக்குள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ரா ஆசியக்கோப்பைக்கு முன்பாகவே இந்திய அணியில் இடம்பெறுவார் என்ற தகவல் கசிந்துள்ளது.

2022 டி20 உலகக்கோப்பையை தவறவிட்ட ஜஸ்பிரிட் பும்ரா!
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஜஸ்பிரிட் பும்ராவின் ஆசையானது நிராசையாகவே முடிந்தது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் அவரது காயம் மோசமாக மாறியதால், அவர் ஆசிய கோப்பையை மட்டுமின்றி டி20 உலகக்கோப்பையும் தவறவிட்டார்.

முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தில் அவதியுற்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2023 ஐபிஎல் தொடருக்கே பும்ரா திரும்பிவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியே இருந்தார். ஐபிஎல்லை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் அவர் பங்கேற்க முடியாத நிலையே இருந்துவந்தது.

இதனால் எப்போது தான் பும்ரா அணிக்குள் திரும்புவார் என்ற எதிர்ப்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே அதிகமாகவே இருந்துவருகிறது. இந்நிலையில் ஆசியக்கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து தொடரிலேயே பும்ரா இந்திய அணிக்கு திரும்புவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக நியூஸ் 18 ஆங்கில தளம் வெளிப்படுத்தியுள்ளது.

அயர்லாந்து தொடரில் பங்கேற்கவிருக்கும் பும்ரா!
பும்ராவின் கம்பேக் குறித்து நியூஸ் 18க்கு பேசியிருக்கும் அதிகாரி ஒருவர், “ஜஸ்பிரிட் பும்ரா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் அயர்லாந்து தொடரில் பங்கேற்கவிருக்கும் வகையிலேயே மிகவும் நன்றாக இருக்கிறார். காயத்தால் நீண்ட கால ஓய்விலிருந்த பும்ரா, இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்புவது ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். எல்லாம் சரியாக இருந்தால், பும்ரா சிறந்த உடற்தகுதியோடு அயர்லாந்து தொடரில் களமிறங்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நிதின் படேல் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் பும்ராவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர். NCA மறுவாழ்வுக் காலத்தில் அவரைத் தொடர்ந்து கண்காணித்து காயத்திலிருந்து மீட்டு எடுத்துவந்துள்ளனர். மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கும் அவர்கள், இனிவரும் எந்த தொடரிலிருந்தும் பும்ரா வெளியேறுவதை விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button