ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக 10வது அணியாக நெதர்லாந்து தகுதிபெற்றுள்ளது.
2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரானது வருகிற அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், ஏற்கெனவே 8 அணிகள் (இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், தென்னாப்பிரிக்கா) தகுதி பெற்றுவிட்டன.
மற்ற இரண்டு இடங்களுக்கு 10 அணிகள் (ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நேபாளம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) போட்டி போட்டன. அதன்படி, இந்த 10 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வந்தன. இதில் இரண்டு சுற்றிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகள், அடுத்த சுற்றான சூப்பர் 6க்கு முன்னேறின. ’குரூப் ஏ’யில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் ‘குரூப் பி’யில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் முதல் 3 இடங்களுக்கான புள்ளிகளைப் பெற்று முன்னேறின.
இதப்பாருங்க> வெஸ்ட் இண்டீஸ் தொடர்: கபில் தேவின் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா?
சூப்பர் 6 பிரிவில், ஏற்கெனவே ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், ஓமன் ஆகிய அணிகள் வெளியேறிய நிலையில், இலங்கை அணி, அதிக வெற்றிகளைப் பெற்று உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக 9வது அணியாக உள்ளுக்குள் நுழைந்தது. அதேநேரத்தில் உலகக்கோப்பை தொடரில் விளையாடக்கூடிய மற்றொரு அணி எதுவென ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. அதை நிர்ணயிக்கும் தகுதிப் போட்டி, இன்று அவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக பிராண்டன் மேக்முல்லன் 106 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக விளையாடிய கேப்டன் ரிச்சி பெரிகாட்டன் 64 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீடே 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதப்பாருங்க> ‘கெட்ட வார்த்தையில் திட்டுவார்…’ தோனி குறித்து இஷாந்த் சர்மா!
பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி, வெற்றி இலக்கை 42.5 ஓவர்களிலேயே தொட்டு அசத்தியது. அவ்வணியில் தொடக்க வீரர்கள் சிறப்பான பங்களிப்பைத் தந்தனர். அதைச் சாதகமாக்கிக் கொண்ட நெதர்லாந்து வெற்றியை நோக்கிப் பயணித்தது.
குறிப்பாக, பாஸ் டி லீடே 92 பந்துகளில் 123 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடக்கம். இவர்தான் 5 விக்கெட்களையும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அந்த அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்து உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு 10வது அணியாக உள்ளுக்குள் நுழைந்தது. உலகக்கோப்பை சுற்றில் விளையாடத் தகுதி பெற்றிருக்கும் நெதர்லாந்தை ஐசிசி வரவேற்றுள்ளது.
பெரும்பாலும் ஸ்காட்லாந்தே உள்ளே வரும் என்று கணித்திருந்த ரசிகர்களுக்கு, நெதர்லாந்து அதிர்ச்சி வைத்தியம் தந்து உள்ளே வந்திருப்பதை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். அது, இந்த தகுதிச் சுற்று லீக் போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸை சூப்பர் ஓவரில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதப்பாருங்க> ஜானி பேர்ஸ்டோ சர்ச்சை அவுட்: ட்விட்டரில் அஸ்வின் – பத்திரிகையாளர் மோதல்!
இலங்கையும், நெதர்லாந்தும் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுவிட்ட போதும், இவ்விரு அணிகளும் குவாலிபயர் 1-2இல் இடம்பிடிப்பதற்காக வரும் 9ஆம் தேதி மோத இருக்கிறது.