சதமடித்து தேர்வாளர்களுக்கு பதிலடி கொடுத்த புஜாரா! கவாஸ்கர், சச்சின், டிராவிட்டை தொடர்ந்து புதிய சாதனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சொதப்பியதால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர் சட்டீஸ்வர் புஜாராவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்திய மண்டலங்களுக்கு இடையேயான துலீப் டிராபி போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகள் முதல் அரையிறுதிப்போட்டியில் விளையாடி வருகின்றன. பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சிறப்பாக பந்துவீசிய மத்திய மண்டல கேப்டன் ஷிவம் மாவி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 102 பந்துகளை சந்தித்து 28 ரன்களோடு நிலைத்திருந்த புஜாராவாலும் முதல் இன்னிங்ஸில் பெரிதாய் எதுவும் செய்ய முடியவில்லை. முடிவில் ஷிவம் மாவியின் அற்புதமான பந்துவீச்சால் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது மேற்கு மண்டலம் அணி.

இதப்பாருங்க> ஒவ்வொரு உலக கோப்பை போட்டியிலும் கோஹ்லியின் பேட்டிங் கிராஃப் அதிகரிக்கிறது..! எதிர் அணிகளுக்கு எச்சரிக்கை..!

தன்னுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய மத்திய மண்டலம் அணியும், ஸ்விங்கிங் கண்டிசனுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 48 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய நாகவாஸ்வல்லா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மத்திய மண்டலம் அணியும் தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கைக்கோர்த்த சூர்யகுமார் யாதவ் மற்றும் சட்டீஸ்வர் புஜாரா இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் போட்டனர். நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த சூர்யகுமார் அரைசதம் அடித்து வெளியேறினார். இறுதிவரை களத்தில் நிலைத்துநின்ற புஜாரா அணியை வழிநடத்தி நல்ல டோட்டலுக்கு எடுத்துச்சென்றார்.

இதப்பாருங்க> MSDக்கான 42வது பிறந்தநாள் கொண்டாட்டம் – KGF ரேஞ்ச் டிரெய்லர் ரசிகர்களால் வெளியிடப்பட்டது!

முதல் தர போட்டியில் 60 சதங்கள் அடித்து சாதனை!
சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய புஜாரா, 14 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சரை விளாசி 278 பந்துகளில் 133 ரன்கள் அடித்தார். இறுதிவரை களத்தில் நின்ற அவர், ரன் அவுட் மூலம் 133 ரன்களில் வெளியேறினார். முதல் தர போட்டிகளில் 19,000 ரன்களை அடித்திருக்கும் புஜாரா, தன்னுடைய 60-வது முதல் தர சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

முதல்தர இந்திய கிரிக்கெட்டில் இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 60 சதங்களை பதிவு செய்துள்ளனர். அந்த வரிசையில் சுனில் கவாஸ்கர் (81), சச்சின் டெண்டுல்கர் (81), ராகுல் டிராவிட் (68), விஜய் ஹசாரே (60) முதலிய ஜாம்பவான்களை தொடர்ந்து 5வது வீரராக 60 முதல்தர சதங்களை பதிவு செய்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டனான விஜய் ஹசாரேவின் 60 சதங்களை சமன் செய்து அசத்தியுள்ளார் புஜாரா.

இதப்பாருங்க> ஒருநாள் உலகக் கோப்பை: சஞ்சு சாம்சன் அடுத்த மிரட்டல்; ஐந்தாவது எண்ணைப் பிடிக்கும் காட்சியில் இன்னொரு நட்சத்திரமும் இருக்கிறார்

இந்திய தேர்வாளர்களுக்கு பதிலடி கொடுத்த புஜாரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொதப்பிய நிலையில், சட்டீஸ்வர் புஜாரா இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஹெய்க்வாட் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *