கழற்றிவிடப்பட்ட கே.எஸ்.பரத்; ஆதரவு கரம் நீட்டும் பிசிசிஐ முன்னாள் தேர்வாளர்கள்! மற்றவர்கள் நிலைஎன்ன?
மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரராக அறிமுகமாகியுள்ளார்.
இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவி சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக எந்தப் போட்டியிலும் இந்திய அணி பங்குபெறாத நிலையில், தற்போது மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி சென்றுள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி டொமினிக்காவில் உள்ள வின்ட்சர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இதில், இந்திய அணியின் சார்பில் விக்கெட் கீப்பராக 24 வயதான இஷான் கிஷன் இறங்கியுள்ளார். இதேபோல், ஐபிஎல்லில் ராஜய்தான் ராயல்ஸ் அணியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடி காட்டி வந்த 21 வயதான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமாகியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்குபெற்ற கே.எஸ்.பரத், இந்தப் போட்டியில் ஆடும் லெவனில் களமிறங்கவில்லை. அதேநேரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பெஞ்ச்சில் அமரவைக்கப்பட்ட ரவிச்சந்திரன் இப்போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதப்பாருங்க> உலகக்கோப்பை: இந்திய அணிக்கு திரும்பும் கே.எல்.ராகுல்?
மேலும், முதல் டெஸ்ட் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட், அக்ஷர் பட்டேல், நவ்தீப் சைனி, முகேஷ் குமார் ஆகியோரும் இடம்பெறவில்லை. அத்துடன், ஷர்துல் மற்றும் சிராஜ் ஆகிய இரண்டு வலதுகை வேகப்பந்து வீச்சாளர்களுடனும், ஜெயதேவ் உனத்கட் இடதுகை வேகப்பந்து வீச்சாளருடனும், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய சுழற்பந்து, ஆல்ரவுண்டர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இதப்பாருங்க> சச்சினை விட அதிக சராசரியோடு இந்திய அணிக்குள் நுழைந்த ஜெய்ஸ்வால்! இஷான் கிஷனுக்கும் வாய்ப்பு!
சில டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளதால், கே.எஸ்.பரத்திற்கு மீண்டும் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்று பிசிசிஐ-யின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர்களும், வீரர்களுமான சபா கரீம் மற்றும் தேவங் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.