”உணர்வுகளை பகிர்ந்துகொள்ள கூட பயமாக இருக்கிறது” – வாய்ப்பு கிடைக்காத மனப்போராட்டம் பற்றி பிரித்வி ஷா

இந்தியாவின் ஜாம்பவான் கிரிக்கெட்டர்கள் வரிசையில் அடுத்து இவர் தான் இருப்பார் என கொண்டாடப்பட்ட பிரித்வி ஷாவிற்கு, தற்போது 3 வடிவிலான இந்திய அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

செமியில் பாகிஸ்தான் – பைனலில் ஆஸ்திரேலியா!யு-19 உலகக்கோப்பை கேப்டன்!
2018 யு-19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த பிரித்வி ஷா, தன்னுடைய சிறப்பான கேப்டன்சி மற்றும் பேட்டிங்கின் மூலம் இந்தியாவிற்கு கோப்பை வென்று கொடுத்தார். அதுவும் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியையும் எதிர்த்து வெற்றிபெற்று கோப்பையை வென்றது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட் தான், அப்போது இந்தியாவின் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தார்.

இதப்பாருங்க> WI அணியை சுழற்றி எடுத்த அஸ்வின்! ஒரே டெஸ்ட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தல்!

2018 யு-19 உலகக்கோப்பையில் இருந்த அனைத்து வீரர்களும் ஒரு பெரிய இடத்திற்கு செல்லக்கூடிய வீரர்களாகவே இருந்தனர். அப்படி ஒரு இந்திய அணியை தயார் செய்திருந்தார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். எதிர்ப்பார்த்ததை போலவே அந்த அணியில் இடம்பெற்ற “பிரித்வி ஷா, சுப்மன் கில், ரியான் பராக், அபிஷேக் சர்மா, அனுகுல் ராய், கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி, அர்ஸ்தீப் சிங்” என ஒரு பெரிய பட்டாளமே இந்திய அணிக்கு கிடைத்தது. ஆனால் இவர்கள் எல்லாரையும் விட சுப்மன் கில்லையும் விட அதிக எதிர்ப்பார்க்கப்பட்ட வீரராக இருந்தது பிரித்வி ஷா மட்டுமே. அவருடைய அட்டாக்கிங் அணுகுமுறை பேட்டிங்கும் கேப்டன்சியும் இந்திய அணிக்கு ஒரு பெரிய வீரர் உருவாகியிருப்பதையே காட்டியது.

இதப்பாருங்க> இந்திய அணிக்கு கேப்டனாகும் ருதுராஜ்; பிசிசிஐ வெளியிட்ட அட்டகாச அறிவிப்பு

அடுத்த சேவாக் என புகழப்பட்ட பிரித்வி! காரணம் என்ன?
தொடக்க வீரராகவும், அட்டாக்கிங் அணுகுமுறையோடும் இருந்த பிரித்வி ஷாவிற்கு யு-19 உலகக்கோப்பை முடிந்த 8 மாதங்களிலேயே இந்தியாவின் டெஸ்ட் அணிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 18 வயதில் களமிறங்கிய பிரித்வி ஷா, அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல் அறிமுக போட்டியில் குறைந்த வயதில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பிரித்வி.

பிரித்வி அந்த போட்டியில் விளையாடிய விதம் தான், அவரை அடுத்த சேவாக் என கூறவைத்தது. அறிமுக போட்டியில் 134 ரன்களை அடித்த அவர், அதை அடிப்பதற்கு வெறும் 154 பந்துகளையே எடுத்துக்கொண்டார். ஒரு அறிமுக வீரர் 238 நிமிடங்கள் களத்தில் நின்று 90 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி சதமடிப்பதெல்லாம் இதற்கு முன்னர் எந்த ஒரு இளம் வீரரும் செய்யாதது. சேவாக்கிற்கு பிறகு இப்படி அதிரடியை பார்க்காத இந்திய ரசிகர்கள் அவரை அடுத்த சேவாக் என்றே அழைத்தனர்.

இதப்பாருங்க> பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் பற்றிய பெரிய அப்டேட், ஆசிய கோப்பைக்கு முன் இந்திய அணியில் ‘மீண்டும்’?

அப்படியே தலைகீழான பிரித்வி ஷாவின் கிரிக்கெட் பயணம்! என்ன நடந்தது?
முதல் போட்டியிலேயே சதம், இந்திய அணியின் 3 வடிவத்திலும் வாய்ப்பு என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தை போலவே ஏறுமுகத்திலேயே இருந்தது பிரித்வி ஷாவின் பயணம். ஆனால் அது 2019 ஊக்கமருந்து சோதனையில் அவர் சிக்கியதற்கு பிறகு அப்படியே தலைகீழாக மாறியது. 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார். அவர் இருமலுக்கு சாப்பிட்ட மருந்தில் செயல்திறனை மேம்படுத்தும் ட்ரக் கலந்திருப்பது தெரியவந்ததால், அவருக்கு 8 மாதங்கள் விளையாட தடை விதித்தது பிசிசிஐ.

அந்த நடவடிக்கைக்கு பிறகு அவர் சொந்த மண்ணில் நடைபெற்ற வங்காளதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை நழுவவிட்டார். மேலும் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தியாவின் டெஸ்ட் அணியில் பங்கேற்கவில்லை. பின்னர் ஒழுக்கமின்மை, காயம், பிட்னஸ் பிரச்னை என பல்வேறு காரணங்களால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு இலங்கை தொடரில் பங்கேற்காத அவர், 2022ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார். ஆனாலும் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதப்பாருங்க> “2023 உலககோப்பையில் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானை ஆதரிப்பார்கள்”-முன்னாள் பாக்.வீரர் சர்ச்சை கருத்து

இந்நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய மோசமான 2023 ஐபிஎல் சீசன் அவருக்கு வாய்ப்பை பெற்றுத்தரவில்லை. இதுவெல்லாம் சாதாரண நிராகரிப்பாகவே தெரிந்தாலும், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறாதது தான், பிரித்வி ஷாவின் கிரிக்கெட் எதிர்காலம் அவ்வளவுதானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் போது, அவருக்கு மட்டும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வெளியில் சென்றால் மக்கள் துன்புறுத்துவார்களோ என்று பயந்து தனிமையிலேயே இருக்கிறேன்!

கிரிக்பஸ் மற்றும் விஸ்டன் இந்தியா உடனான நேர்காணலில் பேசியிருக்கும் பிரித்வி ஷா, இந்திய அணியில் இடம்பெறாத மனப்போராட்டம் குறித்து பேசியுள்ளார். அது குறித்து பேசியிருக்கும் அவர், “நான் முதலில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டபோது, ​​​எனக்கு காரணம் என்னவென்றே தெரியவில்லை. எதனால் நான் நிராகரிக்கப்பட்டேன் என்ற கேள்வி மட்டும் என்னை துளைத்துக்கொண்டே இருந்தது. அது ஃபிட்னஸாக இருக்கலாம் என்று யாரோ சொன்னார்கள். ஆனால் நிச்சயமாக அப்படியில்லை, நான் பெங்களூருவில் வந்து என்சிஏவில் அனைத்துவிதமான பிட்னஸ் சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றேன்.

இதப்பாருங்க> “தோற்றால் வீரர்கள் மாறுகிறார்கள்; ஆனால் கேப்டன்கள் மாறுவதில்லை”-தோனி, ரோகித்தை தாக்கி பேசிய கவாஸ்கர்

மீண்டும் ரன்களை அடித்து, மீண்டும் டி20 அணிக்கு வந்தேன். ஆனால் தற்போது மீண்டும் மேற்கிந்திய தீவுகளுக்கான தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. உண்மையில் எனக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால் நான் இதிலிருந்து வெளியில் வந்து முன்னேற நினைக்கிறேன். ஏனென்றால் இதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது, யாருடனும் சண்டையிட முடியாது” என்று விரக்தியில் கூறியுள்ளார் பிரித்வி.

மேலும் வெளியில் இருந்து தனக்கு என்ன அழுத்தம் இருக்கிறது, எந்த மாதிரியான மனப்போராட்டங்களை எதிர்கொள்கிறேன் என்று மனம் திறந்து பேசிய அவர், “ஒரு தனிநபராக நான் எனக்கான சொந்த மனநிலையில் இருக்க விரும்புகிறேன். மக்கள் என்னைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்கிறார்கள், ஆனால் என்னை அறிந்தவர்களுக்கு மட்டும் தான் நான் எப்படிப்பட்ட மன அழுத்தத்தோடு இருக்கிறேன் என்று தெரியும். அனைத்தையும் பகிர்ந்துகொள்ள எனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை. எல்லாவற்றையும் மீறி இந்த தலைமுறையில் ஒன்று நம்மை சுற்றி நடக்கிறது, அவ்வளவு எளிதாக உங்கள் எண்ணங்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது.

இதப்பாருங்க> ஆசிய கோப்பைக்கு முன் பும்ரா ஏன் இந்திய அணிக்கு தகுதியானவர்?

தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால், எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூட பயமாக இருக்கிறது, பொதுவெளிக்கு சென்றால் மக்கள் துன்புறுத்துவார்களோ என்று வெளியே செல்லக்கூட பயப்படுகிறேன். எங்கு சென்றாலும் சோதனைகள் வரும் என்பதால், தனிமையிலேயே இருப்பதை நான் தற்போது அனுபவிக்க ஆரம்பித்துவிட்டேன்” என்று பிரித்வி ஷா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *