ஆசியக்கோப்பை 2023: சிக்ஸர் விளாசி சதம் அடித்த சாய் சுதர்சன்; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஏ அணி!
நடப்பு ஆண்டு இளைஞர்களுக்கான (ஏ அணி) ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ’ஏ’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய ’ஏ’ அணிகளும், ’பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமீரகம், நேபாள் ஆகிய ’ஏ’ அணிகளும் இடம்பிடித்து விளையாடி வருகின்றன. இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் செல்லும். அதில் வெல்லும் அணிகள் வரும் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றும்.
இதப்பாருங்க> “தோற்றால் வீரர்கள் மாறுகிறார்கள்; ஆனால் கேப்டன்கள் மாறுவதில்லை”-தோனி, ரோகித்தை தாக்கி பேசிய கவாஸ்கர்
அந்த வகையில், இன்று கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் 12வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏ – இந்தியா ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற முகமது ஹரீஸ் தலைமையிலான பாகிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அவ்வணி 48 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ராஜ்வரதன் ஹங்கர்கேகர் 5 விக்கெட்களையும், மானவ் சுதர் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதன தொடக்க பேட்டர்களாக தமிழக வீரர் சாய் சுதர்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கினர். சாய் சுதர்சன் அதிரடியுடனும் நிதானத்தைக் கடைப்பிடிக்க, மறுமுனையில் அபிஷேக் ஷர்மா 20 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவர் சென்றாலும் சுதர்சனுடன் கைகோர்த்த நிகின் ஜோஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதப்பாருங்க> ஆசிய கோப்பைக்கு முன் பும்ரா ஏன் இந்திய அணிக்கு தகுதியானவர்?
இருவரும் அதிரடியாக விளையாடி ரன் வேட்டையைத் தொடர்ந்தனர். இதில் நிகின் ஜோஸ் 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஆனால், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்சன் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 36 ஓவர்களின் முடிவில் இந்திய ஏ அணி 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.
37வது ஓவரை வீசிய ஷான்வாஷ் தகானியின் முதல் பந்தில் சாய் சுதர்சன் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் ரன் எடுக்காவிட்டாலும், 3வது பந்தை சிக்சருக்குத் தூக்கி அசத்தினார். அப்போது அவரது ரன் 98 ஆகவும், இந்திய அணியும் ரன் 204 ஆகவும் இருந்தது. இதையடுத்து அடுத்த பந்தையும் சிக்சருக்குத் தூக்கி செஞ்சுரி அடித்ததுடன், இந்திய அணியையும் வெற்றிபெற வைத்தார்.
இதப்பாருங்க> ”உணர்வுகளை பகிர்ந்துகொள்ள கூட பயமாக இருக்கிறது” – வாய்ப்பு கிடைக்காத மனப்போராட்டம் பற்றி பிரித்வி ஷா
இதையடுத்து இந்திய அணி 36.4 ஓவர்களில் 210 ரன்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இறுதிவரை களத்தில் இருந்த சாய் சுதர்சன், 110 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் உதவியுடன் 104 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக களத்தில் நின்ற கேப்டன் யாஸ் துல் 19 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.