அதிவேக 100 ரன்கள்; இலங்கையின் சாதனையை தகர்த்த இந்திய அணி! ஒரே போட்டியில் இவ்வளவு சாதனைகளா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து, இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்றால் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கூடுதலாக பந்து வீச நேரம் வேண்டும். எனவே இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. கேப்டன் ரோகித் சர்மா 44 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உடன் 57 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 37 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். நான்காவது பேட்ஸ்மேனாக விளையாடிய இஷான் கிஷன் 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் இதில் அடங்கும்.

இதப்பாருங்க> டெஸ்ட் பேட்டிங் தரவரிசை – டாப் 10 இடங்களுக்குள் நுழைந்தார் ரோஹித் ஷர்மா! T20-ல் சூர்யா முதலிடம்!

இதைத் தொடர்ந்து, இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது ‘டிக்ளேர்’ செய்வதாக அறிவித்தது. அப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் டி20 போட்டி போல் அதிரடியாக விளையாடியது ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4ம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவை. இந்திய அணியின் சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளது.

இதப்பாருங்க> 5 வருட காத்திருப்பு.. சச்சினை சமன் செய்ய இன்னும் ஒன்று போதும்; 76-வது சதமடித்தார் விராட் கோலி!

இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் விளாசியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தனது அதிவேகமான அரைசத்தை எட்டினார் ரோகித் சர்மா. அதன்படி, அவர் இந்த போட்டியில் 35 பந்துகளிலேயே அரை சதத்தை பூர்த்தி செய்தார். முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 47 பந்துகளில் அரை சதம் அடித்ததே அவரது அதிவேக டெஸ்ட் அரை சதமாக இருந்தது.

நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளி 712 விக்கெட்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். முன்னதாக இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக அணில் கும்ப்ளே 956 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ஹர்பஜன் சிங் 711 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதப்பாருங்க> ”கோலியின் வெற்றியின் ரகசியம் இதுதான் ; அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்” – ராகுல் டிராவிட் ஓபன் டாக்!

மேலும் இந்த போட்டியின் மூலம் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை இந்திய அணி சார்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிகபட்சமாக கபில்தேவ் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்ததாக அணில் கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த வேளையில் நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் 75 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில ஆண்டுகள் விளையாட இருக்கும் நிலையில் கபில் தேவின் சாதனையை முறியடிக்கவும் அவருக்கு வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதப்பாருங்க> வெறும் 12 ஓவர்களில் 98 ரன்கள்: இந்திய அணி பேட்டிங் புயல்

மேலும் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய அணி என்ற இலங்கையின் சாதனையை இந்தியா தகர்த்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் அறிமுக வீரரான ஜெய்ஷ்வால் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 11.5 ஓவர்களில் 98 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, ரோகித் சர்மா ஆட்டமிழந்த பிறகு 12.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. முன்னதாக, வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் 13.2 ஓவர்களில் இலங்கை அணி 100 ரன்களை விளாசியதே, டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணியின் அதிவேக சதமாக இருந்தது. அந்த சாதனையை இந்திய அணி தகர்த்துள்ளது.

இதப்பாருங்க> 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது, இந்திய இன்னிங்ஸ் 181 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது

அடுத்ததாக கேப்டன் ரோகித் சர்மா – ஜெய்ஷ்வால் கூட்டணி, களமிறங்கிய அனைத்து இன்னிங்ஸ்களிலும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்த ஜோடி, வெறும் 5.3 ஓவர்களில் 50 ரன்களை சேர்த்தது. இதன் மூலம், இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50 ரன்களை சேர்த்த ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது.

இதப்பாருங்க> IND vs WI: டெஸ்டா? டி20 யா..? விரட்டி விரட்டி வெளுத்த இந்திய பேட்ஸ்மேன்கள்; மிரண்டுபோன வெ.இண்டீஸ்!

அதோடு, இந்த தொடரில் ரோகித் சர்மா – ஜெய்ஷ்வால் கூட்டணி 466 ரன்களை குவித்துள்ளது. இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மொத்தமாக அதிக ரன்களை குவித்த இந்திய தொடக்க வீரர்கள் எனும் சாதனையையும் ரோகித் – ஜெய்ஷ்வால் கூட்டணி படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *