உலகக்கோப்பைக்கான அணியை கட்டமைக்குமா இந்தியா? முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா-விண்டீஸ் அணிகள் மோதல்!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 2 மாதங்களே மீதமுள்ள நிலையில் இந்திய அணி எப்படி உலகக்கோப்பைக்கான அணியை கட்டமைக்கப்போகிறது, எந்த வீரர்கள் எந்த ரோலில் செயல்பட போகிறார்கள் என்ற கேள்விகள் ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் 2013 சாம்பியன்ஸ் டிரோபி வென்றதற்கு பிறகு 10 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் வெல்லமுடியாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது.
இதப்பாருங்க> அதிவேக 100 ரன்கள்; இலங்கையின் சாதனையை தகர்த்த இந்திய அணி! ஒரே போட்டியில் இவ்வளவு சாதனைகளா!
2013-க்கு பிறகு 2014, 2015, 2016, 2017, 2019, 2021, 2022, 2023 என ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிரோபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என பலமுறை ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டிகள், அரையிறுதிப்போட்டிகள் வரை இந்திய அணி முன்னேறினாலும் அணியில் இருக்கும் சிறிய குறைகள் எல்லாம் பெரிதாக மாறி கோப்பையை நழுவவிட்டு ஏமாற்றத்தையே தந்துள்ளது அணி.
இந்நிலையில் அத்தனை தவறுகளையும் சரிசெய்துகொண்டு சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை தொடரை பயன்படுத்தி இந்த முறையாவது இந்திய அணி கோப்பையை வெல்லவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு, அனைத்து இந்திய ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது. அதற்கான அடித்தளத்தை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரிலிருந்தே தொடங்கும் என நம்பப்படுகிறது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒருநாள் போட்டி!
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என இந்திய அணி கைப்பற்றியதை அடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் இரண்டு ஆட்டங்கள் பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூலை 27) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 29) ஆகிய தேதிகளிலும், மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி டிரினிடாட் தரௌபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்திலும் நடைபெறவிருக்கிறது.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் கடந்த காலங்களில் இரு அணிகளும் சரிக்கு சமமான பலத்தோடு வெற்றிகளை பகிர்ந்துள்ளனர். 139 போட்டிகளில் விளையாடியிருக்கும் இவ்விரண்டு அணிகளில் இந்தியா 70 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 63 போட்டிகளிலும் வெற்றிபெற்று சம பலத்துடன் நீடிக்கின்றன. இரண்டு அணிகளுக்கான தொடர்களில் 9 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீரராக விராட் கோலியும், அதிக அரைசதங்கள் அடித்த வீரராக (12 அரைசதங்கள்) ரோகித் சர்மாவும் இருக்கின்றனர்.
இதப்பாருங்க> இந்தியா – பாக். மோதும் உலகக்கோப்பை போட்டிக்கான தேதி மாற வாய்ப்பு! நவராத்திரி காரணமா?
பல ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருந்துவரும் 4-ஆம் நிலை வீரர் யார்?
இந்திய அணி 2013ஆம் ஆண்டுக்கு பிறகு கோப்பை வெல்லாமல் போனதற்கு முக்கிய காரணமாக இருந்துவருவது மிடில் ஆர்டர் வீரருக்கான காலி இடம் தான். யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற நட்சத்திர வீரர்கள் போனதிலிருந்து அந்த ஒரு இடம் மட்டும் கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. பல வீரர்களை மிடில் ஆர்டருக்கான 4-ஆம் நிலை இடத்தில் பரிசோதித்த இந்திய அணி, எந்த வீரரையும் இன்னும் சீல் செய்யாமல் இருந்துவருகிறது.
சில ஆண்டுகளாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டாலும், அவர்கள் தற்போது காயத்தால் அவதிப்பட்டுவரும் நிலையில் இன்னும் யார் தான் அந்த இடத்தை நிரப்பபோகிறார்கள் என்ற கேள்வி மட்டும் ஓய்ந்தபாடில்லை.
இதப்பாருங்க> ‘வெஸ்ட் இண்டீஸ் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது’ – ரோகித் சர்மா
இந்நிலையில் தான் இந்திய அணிக்கான அணியில் சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளார். ரிஷப் பண்டிற்கான இடம் இன்னும் காலியாக இருக்கும் நிலையில், ஒருநாள் போட்டியில் 4-ம் நிலை வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற கட்டத்திற்கு சஞ்சு சாம்சன் சரியான தேர்வாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் கொடுத்த போதெல்லாம் சஞ்சு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 11 போட்டிகளில் 66 சராசரியுடன் 330 ரன்களை குவித்திருக்கும் அவர், 2 அரைசதங்களை அடித்துள்ளார்.
அதே போல 4-ம் இடத்திற்கு சூர்யகுமார் யாதவும், விக்கெட் கீப்பர் இடத்திற்கு இஷான் கிஷனும் அணியில் நீடிக்கின்றனர். இதற்கிடையில் எந்த வீரரை எந்த இடத்தில் இந்திய அணி முடிவு செய்யும், எந்த வீரர் உலகக்கோப்பைக்கான வீரராக பார்க்கப்படுவார் என்பதற்கெல்லாம் இந்த தொடரில் தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.