இந்திய அணிக்குத் திரும்பினார் பும்ரா… அயர்லாந்து டி20 தொடருக்கு கேப்டன் அவர்தான்!
காயம் காரணமாக நெடுங்காலம் விளையாடாமல் இருந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் கிரிக்கெட் அரங்குக்கு திரும்பியிருக்கிறார். அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி ஆடவிருக்கும் டி20 தொடரில் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்ப்ரித் பும்ரா சுமார் ஓராண்டாக காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார் பும்ரா. 2022 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு நடந்த தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் முதுகில் காயம் ஏற்பட்டு விலகினார் அவர். அதனால் டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்கவில்லை. நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், அதன்பின் ஓய்வில் இருந்தார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் (NCA) ரீஹேப்பில் இருந்தார் அவர். அதனால் இந்தியன் பிரீமியர் லீக், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற பெரிய தொடர்களில் அவரால் பங்கேற்க முடியாமல் இருந்தது.
இதப்பாருங்க> இந்தியா – பாக். மோதும் உலகக்கோப்பை போட்டிக்கான தேதி மாற வாய்ப்பு! நவராத்திரி காரணமா?
பும்ரா இல்லாதது இந்திய அணியையும் மும்பை இந்தியன்ஸ் அணியையும் பெரிய அளவில் பாதித்தது. டி20 உலகக் கோப்பையில் மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் கண்டது இந்திய அணி. இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஏமாற்றத்தை சந்தித்தது இந்தியா.
மும்பை இந்தியன்ஸ் அணியோ அவர் இல்லாமல் திணறியது. 2023 ஐபிஎல் சீசனின் முதல் சில போட்டிகளில் அந்த அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. ஆர்ச்சர் – பும்ரா இணைக்காக ஆவலாகக் காத்திருந்த நிலையில் இருவருமே காயத்தால் அவதிப்பட்டது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. அதுவும் பும்ராவுக்கு மாற்றாக அனுபவ இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் இல்லாதது ஒட்டுமொத்ததமாக அந்த அணியை பாதித்தது. அவர்களின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்ததால் கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியது மும்பை இந்தியன்ஸ். ஆனால் பும்ரா இல்லாதது ஒவ்வொரு போட்டியிலுமே பிரதிபலித்தது.
இதப்பாருங்க> ‘வெஸ்ட் இண்டீஸ் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது’ – ரோகித் சர்மா
இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் பும்ரா இல்லாமல் போனால் இந்திய அணியின் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடும் என்று பலரும் கருதினர். அதனால் அவர் ஃபிட்னஸ் பற்றிய எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இந்நிலையில் அயர்லாந்து சுற்றுப் பயணம் சென்று டி20 போட்டிகளிலும் விளையாடும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று இரவு அறிவித்தது. இந்த அணியில் பும்ரா இடம்பிடித்திருக்கிறார். இடம்பிடித்தது மட்டுமல்ல, அவரை இந்தத் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாகவும் நியமித்திருக்கிறது பிசிசிஐ. கேப்டன் ரோகித் ஷர்மா, துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவருக்குமே ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதப்பாருங்க> உலகக்கோப்பைக்கான அணியை கட்டமைக்குமா இந்தியா? முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா-விண்டீஸ் அணிகள் மோதல்!
பும்ரா மட்டுமல்லாமல் காயத்தால் நீண்ட காலம் கிரிக்கெட் ஆடாமல் இருந்த மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் இந்திய அணிக்குத் திரும்பியிருக்கிறார். 15 பேர் கொண்ட இந்த அணியில் ஐபிஎல் ஹீரோ ரிங்கு சிங் இடம்பெற்றிருக்கிறார். விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் ஷர்மாவுக்கு இடம் கிடைத்திருக்கிறது. ஐபிஎல் சமயத்தில் காயமடைந்திருந்த தமிழக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் இந்த அணியில் இடம்பெற்றிருக்கிறார்.
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி:
ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்)
ருதுராஜ் கெய்க்வாட் (துணைக் கேப்டன்)
யஷஷ்வி ஜெய்ஸ்வால்
திலக் வர்மா
ரிங்கு சிங்
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்)
ஷிவம் தூபே
வாஷிங்டன் சுந்தர்
ஷபாஸ் அஹமது
ரவி பிஷ்னாய்
பிரசித் கிருஷ்ணா
ஆர்ஷ்தீப் சிங்
முகேஷ் குமார்
அவேஷ் கான்.
அயர்லாந்து vs இந்தியா சர்வதேச டி20 தொடர் அட்டவணை
முதல் டி20 போட்டி – ஆகஸ்ட் 18 – டுப்லின்
இரண்டாவது டி20 போட்டி – ஆகஸ்ட் 20 – டுப்லின்
மூன்றாவது டி20 போட்டி – ஆகஸ்ட் 23 – டுப்லின்