Cricket

இந்தியா – பாகிஸ்தான் பலப்பரிட்சை.. ஆசியக் கோப்பையில் இரு அணிகளின் சாதக, பாதகங்கள் என்ன?

இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் பாபர் ஆசம் ஒருமுறை கூட அரைசதம் அடித்ததில்லை. அவரது அதிகபட்சமே 48 ரன்களாகத்தான் இருந்துள்ளது.

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கு பெற்றுள்ள 16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 அன்று பாகிஸ்தானில் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையே முதல் போட்டியும் இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இரண்டாவது போட்டியும் நடந்தது. இதில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்றன.

விராட் கோலி விளாசிய 82 ரன்கள்!
இந்நிலையில், ஆசியக் கோப்பையின் மூன்றாவது போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இதற்கு முன் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் இறுதிக் கட்டத்தில் ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் கோஹ்லி அடித்த இரண்டு சிக்ஸர்களை மறக்க முடியாது. அந்த போட்டியில் அவர் 53 பந்துகளை எதிர்கொண்டு 82 ரன்களை எடுத்தார். நாளை நடைபெற இருக்கும் போட்டியிலும் கோஹ்லி விஸ்வரூபம் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்த்துள்ளது.

அந்த போட்டியில் பாகிஸ்தானின் பிரதான பந்துவீச்சாளர்களாக இருக்கும் ஷாகின் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹாரிஸ் ராஃப் போன்றோரை எதிர்கொண்டார். தற்போது ஆசியக் கோப்பையிலும் பாகிஸ்தான் அணி ஏறத்தாழ அதே பந்துவீச்சாளர்களைக் கொண்டே களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கோஹ்லி கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஆட்டங்கள் அனைத்தும் டி20 போட்டிகள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனாலும் பாகிஸ்தான் என வரும் போது கோஹ்லியின் ஆட்டம் எப்போதும் தனித்துவமானது, ஆக்ரோஷமானது..

இடக்கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறும் இந்திய வீரர்கள்! அதிரடி காட்டும் ரோஹித்
இருந்த போதும் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலி, இஷான் ஆகியோர் தடுமாறியுள்ளனர். ரோஹித் 25.8 என்ற சராசரியுடன் 5 முறை தனது விக்கெட்டை இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பறிகொடுத்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி 5 ஆட்டங்களில் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். அவரது கடைசி 5 இன்னிங்ஸ்கள்.. 91(119), 0(3), 52(39), 111*(119), 140 (113). விராட் கோலி இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 3 முறையும் இடது கை சுழலுக்கு எதிராக 7 முறையும் தனது விக்கெட்டை இழந்துள்ளார். மிகக் குறைவாகவே சராசரியை கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கே.எல்.ராகுல் ஆப்செண்ட்
கே.எல்.ராகுல் காயம் காரணமாக முதல் இரு ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில், நான்காவது இடத்தில் ஆட, அவருக்கு பதிலாக இஷான் கிஷன் பரிசீலனையில் இருக்கிறார். இஷான் 5 ஆவது இடத்தில் ஆடியவர் என்றாலும் ஸ்ட்ரைக் ரேட் மிகக் குறைவாகவே வைத்துள்ளார். ஆனாலும் அவர் இடதுகை பேட்ஸ்மேன் என்பதும் ஒரு பலம்.

ஆனால் எதிரணியில் இருப்பது ஷாகின் அப்ரிடி. இந்தியா பாகிஸ்தான் கடைசியாக விளையாடிய சில போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஷாகின் அப்ரிடிக்கு எதிராக திணறியதை நாம் கண்டோம். அதிரடி ஸ்விங்கர்களால் விக்கெட் வேட்டையை நிகழ்த்தியவர் ஷாகின் அப்ரிடி. அவருக்கு இணையாக ஹரிஸ் ராஃப், நசீம் ஷா ஆகியோரும் கைகொடுக்க இந்திய அணிக்கு தலைவலியாக அமையலாம்.

பாபர் அசாம் ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை!
மறுமுனையில் பாபர் ஆசாம் இந்திய அணிக்கு எதிராக தடுமாறியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் பாபர் ஆசம் ஒருமுறை கூட அரைசதம் அடித்ததில்லை. அவரது அதிகபட்சமே 48 ரன்களாகத்தான் இருந்துள்ளது. குல்தீப் யாதவ் பாபர் ஆசமிற்கு எதிராக சிறப்பாக பந்துவீசியுள்ளார். இருந்த போதும் நேபாள் அணிக்கு எதிராக போட்டியில் அவர் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இஃப்திகார் அகமது மற்றும் பாபர் ஆசம் மட்டுமே நேபாள் அணியுடன் சதமடித்துள்ள நிலையில் மற்ற வீரர்களை நேபாள் பந்துவீச்சாளர்கள் விரைவாக வெளியேற்றினார்கள். இதே நிலை இன்றும் தொடருமானால் ஆட்டத்தில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தும்.

இந்திய அணியில் பந்துவீச்சைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா, ஜடேஜா என அனைவரையும் சேர்த்து 6வது பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இந்தியா மேலும் ஒரு பேட்டருடன் களம் காண நினைத்தால் குல்தீப் யாதவிற்கு பதில் ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் தேர்வு செய்யப்படலாம்.

போட்டி நடைபெறும் இடமான பல்லிகெலேவில் மழைக் குறுக்கீடு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி: ரோஹித் சர்மா (c), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (WK), ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர்/அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (c), முகமது ரிஸ்வான் (WK), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button