ஒவ்வொரு ஆண்டும் இரு ஐ.பி.எல் தொடர்கள்… – மகிழ்ச்சியான செய்திக்கு ரவி சாஸ்திரி பச்சைக்கொடி
ரவி சாஸ்திரி தெரிவிக்கையில், இரு நாட்டு தொடரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அதிகமாக நடத்தப்படுகிறது. என்னை பொறுத்தவரை 20 ஓவர் கிரிக்கெட், உதைபந்து போட்டி போன்று இருக்க வேண்டும். அதாவது 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் அதற்குரிய உலகக்கிண்ண போட்டியில் மட்டுமே இருக்க வேண்டும். இரு நாட்டு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் தேவையில்லை. அதை மக்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை. நான் இந்திய அணிக்கு 6-7 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்துள்ளேன். அந்த காலக்கட்டத்தில் இந்திய அணி விளையாடிய 20 ஓவர் போட்டிகளில் உலகக்கிண்ணம் தவிர்த்து மற்ற எதுவும் நினைவில் இல்லை. ஒரு அணி உலகக்கிண்ணம் வென்றால் அது எப்போதும் நினைவில் இருக்கும்.
துரதிர்ஷ்டவசமாக எனது பயிற்சி காலத்தில் அது நடக்கவில்லை. உலகம் முழுவதும் 20 ஓவர் வடிவிலான லீக் போட்டிகள் தற்போது நடக்கின்றன. ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்கள் நாட்டில் நடக்கும் 20 ஓவர் லீக்கில் விளையாட வீரர்களுக்கு அனுமதி அளிக்கின்றன. அது அவர்களது உள்ளூர் போட்டியாகவும் இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், 2 ஆண்டுக்கு ஒரு முறை 20 ஓவர் உலகக்கிண்ண போட்டியில் விளையாடினால் போதும். பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐ.பி.எல். போட்டியை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தலாம். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. எதிர்காலத்தில் அப்படி நடக்க வாய்ப்புள்ளது. என தெரிவித்தார்.