Cricket

இந்தியா பாகிஸ்தான் ஆசியக் கோப்பை.. ஆசிய கவுன்சில் அறிவிப்பும்.. தொடரும் எதிர்ப்பும்..

2023 ஆசியக்கோப்பை தொடரானது ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தொடரின் 6 லீக் போட்டிகள் நடந்துமுடிந்த நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன. லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் முதலிய நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.

செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் மோதின. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 266 ரன்களை எட்டிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை பாகிஸ்தான் அணி தொடங்கும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. போட்டியில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி சிறப்பாகவே விளையாடியது. இரண்டு மிகப்பெரிய அணிகள் மோதிய போட்டியில் முடிவில்லாமல் போனது பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதுமட்டுமல்லாமல் எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லக்கூடிய வரிசையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இருக்கும் நிலையில், இரண்டு அணிகளுக்குமான போட்டியின் முடிவை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

கடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், வரும் சூப்பர் 4 சுற்று போட்டியில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் பிரத்யேகமாக ரிசர்வ் டே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்தப் போட்டியில் 90% மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால், ரிசர்வ் டே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையால் போட்டி தடைபட்டால் மறுநாள் போட்டியை காணும் வகையில் டிக்கெட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முதலில் இந்தியா பாகிஸ்தான் மோதும் சூப்பர் 4 போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதால், அதனை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என பாகிஸ்தான் நிர்வாகம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கை வைத்திருந்தது. அதனை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்த நிலையில், தற்போது ரிசர்வ் டே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவு இலங்கை அல்லது வங்கதேச அணியை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், “இந்த செய்தி உண்மையென்றால் முற்றிலும் வெட்கக்கேடானது. ஒருங்கிணைப்பாளர்கள் இரு அணிகளுக்கு மட்டுமே வித்தியாச விதிமுறைகளுடன் போட்டியை நடத்துவது நெறியற்றது” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், சென்னையில் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த முன்னாள் இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன், “அனைத்து அணிகளையும் சரிசமமாக பார்க்க வேண்டும், ஒரு போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வழங்கிவிட்டு மற்ற போட்டிகளுக்கு வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு குறித்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளின் பயிற்சியாளர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இலங்கை அணியின் பயிற்சியாளர் க்றிஸ் சில்வர்வுட், “ரிசர்வ் நாளில் போட்டியின் முடிவு புள்ளிப் பட்டியலை பாதித்தால் அப்போது சிக்கலாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவை விமர்சித்துள்ளார். இலங்கையில் மோசமான வானிலை போட்டி முடிவுகளை பாதிக்கும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். ஐக்கிய அமீரகத்திலும் பாகிஸ்தானிலும் பாதிப்பாதியாக போட்டிகளை நடத்தக் கூறியும் ஷா சம்மதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button