“உலகக்கோப்பைக்கான அணியை தேர்ந்தெடுத்துவிட்டோம்.. அதில் சூர்யா இருக்கிறார்!” – ராகுல் டிராவிட்

உள்ளேவா வெளியேவா எனும் விளையாட்டில் இருந்து இன்னும் சூர்யகுமாரின் இடம் முடிவுக்கு வராத நிலையில், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க விரும்புவதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரராக இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியாமல் திணறிவருகிறார். 27 ஒருநாள் போட்டிகளில் 537 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும் அவர், இரண்டு அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவருடைய சராசரி வெறும் 24.14 ஆகவே இருந்துவருகிறது.

இந்நிலையில் சூர்யகுமாரை ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கும் வகையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எடுத்துள்ளது. மிடில் ஆர்டர் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டுவருவாரா? இல்லையா? என்ற பெரிய கேள்விக்கு ஆளாகியிருக்கும் நிலையில், சூர்யகுமாரின் பேக்கப்பை இந்திய கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சூர்யாவிற்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க விரும்புகிறோம்! – ராகுல் டிராவிட்
ODI கிரிக்கெட்டில் மோசமான சராசரி வைத்திருக்கும் சூர்யாவிற்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பது விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில், மீண்டும் சூர்யாவிற்கு வாய்ப்பளிக்க போவதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

சூர்யா குறித்து பேசியிருக்கும் அவர், “நாங்கள் சூர்யகுமார் யாதவை முழுமையாக ஆதரிக்கிறோம். ஒருநாள் கிரிக்கெட்டில் நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதை சிறப்பாக செய்து போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவருடைய ஃபார்மை மீட்டெடுப்பார் என நம்புகிறோம். மேலும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை நாங்கள் தேர்ந்தெடுத்துவிட்டொம், அதில் சூர்யகுமார் இருக்கிறார்” என்று டிராவிட் குறிப்பிட்டுள்ளார்.


உலகக்கோப்பைக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில், ரோகித், கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் இல்லாத இந்திய அணியை பரிசோதிக்கும் கடைசி முயற்சி இதுவாகும். உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வரும் 27ஆம் தேதிக்குள் இறுதிப்படுத்தப்படும் நிலையில், அதில் சூர்யாவின் மாற்றம் குறித்து பெரிதாக கவலை இல்லை எனவும் ராகுல் டிராவிட் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *