3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா போராடி தோல்வி!
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆறுதல் தேடிக் கொண்டது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 2-0 என கைப்பற்றிய நிலையில், தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்யும் எண்ணத்தில் மூன்றாவது போட்டியில் இன்று (செப். 27) களமிறங்கியது ஆஸ்திரேலியா.
இந்த போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷானுக்கு ஓய்வளிக்கப்பட்டு, சூர்யகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் முதலிரண்டு போட்டிகளில் ஓய்விலிருந்த கேப்டன் ரோகித், விராட் கோலி, குல்தீப் யாதவ் முதலிய வீரர்கள் அணிக்கு திரும்பினர். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
அதன்படி, அவ்வணியின் தொடக்க பேட்டர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஷ் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். முதலிரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த டேவிட் வார்னர் இந்த போட்டியிலும் தொடர்ச்சியாக 3வது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.
அவர்களுக்குப் பின் வந்திறங்கிய வீரர்களும் சிறப்பான பங்களிப்பைத் தந்தனர். இதனால் அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்களைக் குவித்தது. அவ்வணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் (56 ரன்கள்), மிட்செல் மார்ஸ் (96), ஸ்டீவ் சுமித் (74), லபுஷேன் (72) ஆகியோர் நல்ல ரன்களை எடுத்தனர். இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பின்னர் கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னில் ஏமாற்றினாலும், கேப்டன் ரோகித் சர்மா அதிரடி காட்டினார். அவர் 57 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 81 ரன்கள் குவித்தார். அவருக்குப் பின் களமிறங்கிய விராட் கோலியும் தன் பங்குக்கு 56 ரன்கள் எடுத்தார்.
அவருக்கு துணையாய் நின்று விளையாடி ஸ்ரேயாஸ் ஐயரும் 48 ரன்கள் எடுத்தார். ஆனால் அதற்குப் பின் களமிறங்கிய வீரர்கள் நிலையாய் நின்று விளையாடாததால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது.
இறுதியில் ரவீந்திர ஜடேஜா 35 ரன்களும், கே.எல்.ராகுல் 26 ரன்களும் எடுக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று ஆறுதலைத் தேடிக் கொண்டது. ஏற்கெனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அணி தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.