“இந்த பிட்ச் ஜடேஜாவுக்காக காத்திருக்கிறது” – சரியாக கணித்த தினேஷ் கார்த்திக்! நிஜமாக்கிய ஜட்டு!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, தன்னுடைய விண்டேஜ் ஃபார்மை மீண்டும் கண்முன் கொண்டுவந்தார்.

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுடைய முதல் போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இரண்டு சமபலம் கொண்ட அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

சென்னையில் நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்திலேயே மென் இன் ஃபார்மில் இருக்கும் மிட்சல் மார்ஸை 0 ரன்னில் வெளியேற்றிய ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 5 ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்தாலும் அதற்கு பிறகு கைக்கோர்த்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அட்டாக் செய்த இவர்கள், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை செட்டில் ஆக விடாமல் சிறப்பாக விளையாடினர்.

நிலைத்து நின்ற பிறகு அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்ட ஆரம்பித்த இந்த ஜோடி, 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஆஸ்திரேலியாவை சரியாக பாதைக்கு அழைத்து சென்றது. ஹர்திக் பாண்டியா, பும்ரா என யார் பந்துவீசினாலும் பவுண்டரிக்கு விரட்டிய இவர்களை பிரிப்பதற்கு ஸ்பின்னர்களை நாடினார் கேப்டன் ரோகித் சர்மா. சொந்த மண்ணில் ரவி அஸ்வினுக்கு சென்றாலும் அவரை ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக கையாண்டார். தொடர்ந்து பந்துவீச வந்த குல்தீப் யாதவ் ஒருவழியாக 41 ரன்களில் டேவிட் வார்னரை வெளியேற்றி வெற்றிகரமாக தெரிந்த ஜோடியை பிரித்துவைத்தார்.

ஸ்டீவ் ஸ்மித், லபுசனேவை அடுத்தடுத்து வெளியேற்றி ஆட்டத்தை மாற்றிய ஜடேஜா!
என்னதான் விக்கெட்டுகள் விழுந்தாலும் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஸ்மித் மற்றும் லபுசனே இருவரும் நல்ல டச்சில் விளையாடினார்கள். மெதுவாக 30 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நோக்கி நகர்ந்த இந்த ஜோடியை பிரிக்கவே களத்திற்கு வந்தார், ரவீந்திர ஜடேஜா. பும்ரா, சிராஜ், அஸ்வின், குல்தீப் யாதவ் என அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் எதிராக தரமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித், ஜடேஜாவுக்கு எதிராக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.

டெஸ்ட், ஒடிஐ என இரண்டு வடிவத்திலும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு டஃப் கொடுக்கும் பவுலர் என்றால் அது ரவீந்திர ஜடேஜா தான். இந்த மோதல் எப்படி இருக்கப்போகிறது என்று சொல்வதற்குள்ளாகவே, ஸ்மித்தின் ஸ்டம்பை தகர்த்தார் ஜடேஜா. தனது பழைய விண்டேஜ் பவுலிங்கை வெளிப்படுத்திய ஜட்டு, ஸ்மித்தை அசால்ட்டாக வெளியேற்றி அசத்தினார்.

பின்னர் ஆஸ்திரேலியாவை நிற்கவே விடாத ஜடேஜா அடுத்த ஓவரில் 41 பந்துகளை சந்தித்து நிலைத்து நின்ற லபுசனேவையும் 27 ரன்னில் வெளியேற்றினார். தொடர்ந்து களத்திற்கு வந்த அலெக்ஸ் கேரியை களத்தில் நிற்கவே விடாமல் 0 ரன்னில் வந்த வழியாகவே திருப்பி அனுப்பினார் ஜட்டு. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, ஆட்டத்தையே தலைகீழாக திருப்பி போட்டார்.

இன்றைய பிட்ச் ஜடேஜாவுக்காக காத்திருக்கிறது! – சரியாக சொன்ன தினேஷ் கார்த்திக்
போட்டி தொடங்குவதற்கு முன் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த தினேஷ் கார்த்திக், இன்றைய போட்டியில் ஜடேஜா தான் விக்கெட் வீழ்த்த போகிறார் என தெரிவித்திருந்தார்.

அந்த பதிவில் ஆடுகளத்தின் புகைப்படத்தை பகிர்ந்திருந்த அவர் தினேஷ், “இது திரும்ப கூடிய ஆடுகளம். இந்த நாள் ஜடேஜாவுக்கு சிறந்த நாளாக இருக்க போகிறது” என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது ஜடேஜா தினேஷ் கார்த்திக் சரியான கணிப்பை நிஜமாக்கியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 2, குல்தீப் 2 என மற்ற ஸ்பின்னர்களும் அசத்தலாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ரன்களையும் கட்டுப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *