Cricket

இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் 3 பேர் டக் அவுட்! இந்தியா படைத்த மோசமான சாதனை!

இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் 3 பேர் டக் அவுட்டான நிலையில் இந்திய அணி ஒரு மோசமான சாதனையை உலகக்கோப்பையில் படைத்துள்ளது.

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுடைய முதல் போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இரண்டு சமபலம் கொண்ட அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் விறுவிறுப்பான போட்டியாக நடந்துவருகிறது.

ஜடேஜாவை சுழலில் ஆட்டம் கண்ட ஆஸ்திரேலியா!
சென்னையில் நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்திலேயே மென் இன் ஃபார்மில் இருக்கும் மிட்சல் மார்ஸை 0 ரன்னில் வெளியேற்றிய ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 5 ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்தாலும் அதற்கு பிறகு கைக்கோர்த்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அட்டாக் செய்த இவர்கள், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை செட்டில் ஆக விடாமல் சிறப்பாக விளையாடினர்.

நிலைத்து நின்ற பிறகு அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்ட ஆரம்பித்த இந்த ஜோடி, 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஆஸ்திரேலியாவை சரியாக பாதைக்கு அழைத்து சென்றது. தொடர்ந்து பந்துவீச வந்த குல்தீப் யாதவ் ஒருவழியாக 41 ரன்களில் டேவிட் வார்னரை வெளியேற்றி வெற்றிகரமாக தெரிந்த ஜோடியை பிரித்துவைத்தார்.

என்னதான் விக்கெட்டுகள் விழுந்தாலும் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஸ்மித் மற்றும் லபுசனே இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடினார்கள். பின்னர் பந்துவீச வந்த ஜடேஜா ஒரு மாயாஜால பந்தில் ஸ்மித்தின் ஸ்டம்பை தகர்த்தார். அடுத்தடுத்து லபுசனே, அலக்ஸ் கேரி என இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றிய ஜட்டு ஆஸ்திரேலியாவை கட்டுக்குள் கொண்டுவந்தார். முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

3 இந்திய வீரர்கள் டக் அவுட்! மோசமான சாதனை படைத்த இந்தியா!
200 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியை வைத்திருந்தனர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள். முதல் ஓவரிலேயே இஷான் கிஷானை டக் அவுட்டில் ஸ்டார்க் வெளியேற்ற, அடுத்த ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரையும் அடுத்தடுத்து 0 ரன்களில் வெளியேற்றி அசத்தினார் ஹசல்வுட். 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை பதிவுசெய்தது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 3 பேரும் 0 ரன்னில் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பையிலும் இதுவே முதல்முறை. ஏற்கனவே 1983 உலகக்கோப்பையில் ஓபனர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்னமாச்சாரி ஸ்ரீகாந்த் இருவரும் மட்டுமே டக் அவுட்டாகி இருந்தனர். ஜிம்பாப்வேக்கு எதிரான அந்த போட்டியில் இந்திய அணியே வெற்றிப்பெற்றிருந்தது. தற்போது இந்திய அணி 28 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. கோலி 59 ரன்னிலும், ராகுல் 51 ரன்னிலும் களத்தில் நீடிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button