கிங் Catch-ஐ தவறவிட்டால்..அவர் உங்களிடமிருந்து போட்டியை எடுத்துச்சென்றுவிடுவார்!- கோலி பற்றி யுவராஜ்
2023 உலகக்கோப்பை தொடரின் முதல் மோதலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. பும்ரா தொடக்கத்திலேயே மிட்சல் மார்ஸை வெளியேற்றி நல்ல தொடக்கம் கொடுக்க, மிடில் ஆர்டரில் வீசிய ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் விக்கெட்டுகளை அள்ளினர். 6 பந்துகளில் 3 விக்கெட்டுகளை அள்ளிய ரவீந்திர ஜடேஜாவின் அற்புதமான பவுலிங்கின் உதவியால், ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களுக்குள் சுருட்டியது இந்திய அணி.
200 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரையும் 0 ரன்னில் வெளியேற்றி தரமான கம்பேக் கொடுத்தது ஆஸ்திரேலியா. அடுத்துவந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 0 ரன்னில் நடையை கட்ட டாப் ஆர்டர்கள் 3 பேரும் டக் அவுட்டில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போதும் அடுத்து கைக்கோர்த்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் 8வது ஓவரை வீசவந்த ஹசல்வுட் விராட் கோலியை வெளியேற்றும் ஒரு அற்புதமான பவுன்சரை வீசினார். அதை காற்றில் அடித்த விராட் கோலி வெளியேறிவிடுவார் என்று நினைத்த போது, கேட்ச்சிற்கு வந்த மிட்சல் மார்ஸ் கேட்ச்சை பிடிக்காமல் கோட்டைவிட்டார். ஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்ட நிலையில், தற்போது விராட் கோலி அரைசதம் கடந்து விளையாடிவருகிறார். கேட்ச்சை தவறவிட்ட போது இந்தியா 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளுடன் இருந்தது. கோலி 13 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
கிங் கேட்ச்சை கோட்டைவிட்டால் போட்டியை கோட்டைவிட்டு விடுவீர்கள்! – யுவராஜ் சிங்
இந்நிலையில் இந்திய அணி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங், “ஒரு அணியில் 4வது பேட்ஸ்மேன் அழுத்தத்தை உள்வாங்க கூடியவராக இருக்க வேண்டும். கடினமான நேரத்தில் இன்னிங்ஸை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியாக அணி உங்களை இறக்கும் போது நீங்கள் என்ன செய்யவேண்டும் என சிறப்பாக சிந்திக்க வேண்டும். எனக்கு இன்னமும் ஏன் கேஎல் ராகுல் 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய வரவில்லை என தெரியவில்லை. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான 4வது இடத்தில் சதம் அடித்து நிரூபித்த போதும் இந்திய அணி அவரை முன்னதாகவே களமிறக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் “கிங் கோலியின் கேட்ச்சை நீங்கள் தவறவிட்டால் உங்களுக்கு பின்னர் அதிக நேரம் தேவைப்படும். அதற்குள் அவர் உங்கள் போட்டியையே எடுத்துச்சென்றுவிடுவார். ஆக ராஜாவை தவறவிடாதீர்கள். இப்போது தான் ஆட்டம் ஆரம்பிக்கிறது” என கூறியுள்ளார்.