’அடடே.. சிக்ஸ் போய்விட்டதே..’ கவலைப்பட்ட கே.எல்.ராகுல்! கலகலப்பான ஆடியன்ஸ்.. பின்னணி இதுதான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் கே.எல்.ராகுல் சதத்தைத் தவறவிட்டது குறித்து கவலைப்பட்ட விஷயம் வைரலாகி வருகிறது.
உலகக்கோப்பை: இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்
இந்தியாவில் 50 ஓவர் 13-வது ஆடவர் உலகக்கோப்பை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இந்த நிலையில், 5-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நேற்று (அக்.8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்கள் எடுத்தது.
வெற்றிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல்
பின்னர் ஆடிய இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் பெரிதும் விமர்சனத்துக்குள்ளான விக்கெட் கீப்பர் இறுதிவரை களத்தில் நின்று 97 ரன்கள் எடுத்ததுடன் இந்திய அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் சதத்தைத் தவறவிட்டது குறித்து கவலைப்பட்ட விஷயம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
செஞ்சுரி அடிக்க நினைத்த கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல் 91 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்தியாவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அதேநேரத்தில், அவர் சதம் அடிக்க 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 41வது ஓவரை கம்மின்ஸ் வீச, கே.எல்.ராகுல் எதிர்கொண்டார். முதல் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தால், இந்திய அணியின் ஸ்கோர் சமமாகிவிடும். பின்னர் அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தால் இந்திய அணி வெற்றிபெறுவதோடு, தாமும் சதம் அடித்துவிடலாம் என கே.எல்.ராகுல் நினைத்தார். அதாவது 91 ரன்னில் தாம், ஒரு பவுண்டரி அடித்தால் 94 ரன்கள் வந்துவிடும். பின்னர், ஒரு சிக்ஸர் அடித்தால், சதம் போட்டுவிடலாம் என நினைத்தார், ராகுல்.
சிக்ஸ் போனதற்காகக் கவலைப்பட்ட ராகுல்
ஆனால், அவர் நினைத்தப்படி நடக்காததால் கவலைக்குள்ளானார். முதல் பந்தை அவர் சந்தித்தபோதும் அதில் ரன் எடுக்கவில்லை. இதையடுத்து, 2வது பந்தை ஆஃப் சைடு தூக்கி அடித்தார். பந்து பவுண்டரிக்கு போகும் என நினைத்தார். ஆனால், லைனைத் தாண்டி சிக்ஸ் சென்றுவிட்டது. இதையடுத்து, இந்தியா 201 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கே.எல்.ராகுல் 97 ரன்கள் எடுத்தார். சிக்ஸ் சென்றதும், ’அடடே… சிக்ஸ் போய்விட்டதே’ என கவலையில் அப்படியே உட்கார்ந்தார். இந்த சம்பவம்தான் வைரலாகி வருகிறது.
’குளித்துவிட்டு ஓய்வெடுக்க நினைத்தேன்’ – ராகுல்
இதுகுறித்துப் பேசிய ராகுல், ’கடைசிப் பந்தை நான் நன்றாக அடித்தேன். நான் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து சதத்தை பூர்த்திசெய்ய விரும்பினேன். அடுத்தமுறை சிறப்பாக பேட்டிங் செய்து சதத்தைப் பூர்த்தி செய்வேன் என்று நம்புகிறேன்’ என்றார்.
முன்னதாக அவர், ‘ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் முடிவடைந்ததும், நான் குளித்துவிட்டு அரை மணி நேரம் ஓய்வெடுக்க நினைத்தேன். ஆனால், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் தொடர்ந்து 3 விக்கெட்கள் விழுந்ததும் நான் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் உடனே களத்திற்கு வந்தேன். அப்போது, ‘கொஞ்ச நேரம் இங்கு டெஸ்ட் கிரிக்கெட்போல விளையாட வேண்டும்’ என விராட் கோலி என்னிடம் கூறினார். அதையே இருவரும் செயல்படுத்தினோம். அணிக்காகச் சிறப்பாக விளையாடியதில் மகிழ்ச்சி’ என தெரிவித்திருந்தார்.
97 ரன்கள் எடுத்ததன்மூலம் சில சாதனைகளைப் படைத்த ராகுல்
97 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுல், நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். தவிர, அந்தப் போட்டியில் சில சாதனைகளையும் செய்தார். உலகக்கோப்பை தொடரில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டே முதலிடத்தில் உள்ளார். அவர், கடந்த 1999 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக 145 ரன்கள் எடுத்துள்ளார்.
தற்போது கே.எல்.ராகுல், அதாவது நேற்றைய போட்டியில் 97 ரன்கள் எடுத்ததன் மூலம் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு அடுத்த தல தோனி உள்ளார். அவர் கடந்த 2011 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக 91 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்து, உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் கே.எல்.ராகுல் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் ஷிகர் தவான் (117 ரன்கள்) முதல் இடத்திலும், அஜய் ஜடேஜா (100) 2வது இடத்திலும் உள்ளனர்.