”இனி உன்னையோ உன் பெயரையோ பார்க்கவே கூடாது”- 2011ல் கோலியை குறைத்து மதிப்பிட்ட நெதர்லாந்து வீரர்
2011 உலகக்கோப்பையை தொடர்ந்து 2023 உலகக்கோப்பையிலும் பங்கேற்றிருக்கும் நெதர்லாந்து வீரர், இளம் வயது விராட் கோலியை வம்பிழுத்தது குறித்து பேசியுள்ளார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 3 வீரர்களின் அரைசதத்தால் 50 ஓவர் முடிவில் 322 ரன்களை குவித்துள்ளது. தற்போது 323 வெற்றி இலக்கை நோக்கி நெதர்லாந்து பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக க்ரிக்பஸ் உடன் பேசியிருக்கும் நெதர்லாந்து வீரர் வெஸ்லி பாரேசி, 2011 உலகக்கோப்பையின்போது இளம் வீரராக இருந்த விராட் கோலியிடம் வம்பிழுத்தது குறித்து பேசியுள்ளார். நெதர்லாந்து அணியில் 2011 உலகக்கோப்பையில் பங்கேற்று தற்போதும் இடம்பெற்ற ஒரே வீரர் வெஸ்லி பாரேசி ஆவார். விராட் கோலியை போல்டாக்கி வெளியேற்றிவிட்டு ஆக்ரோசமாக கூறியது பற்றி நினைவுகூர்ந்துள்ளார் பாரேசி.
இனி உனது பெயரை கூட இந்திய அணியில் பார்க்கமாட்டோம்! – வெஸ்லி பாரேசி
2011 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் நெதர்லாந்து மோதிய போட்டியில் விராட் கோலி 12 ரன்களில் போல்டாகி வெளியேறுவார். அந்த நிகழ்வின்போது நடந்தது பற்றி கூறியிருக்கும் பாரேசி, “அன்றிரவு நான் கொஞ்சம் இறுமாப்பில் இருந்தேன். எங்களுக்கு எதிராக இந்திய அணி விரைவாகவே 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடிக்கும் ஒரு நல்ல வாய்ப்பு இருந்ததாக எங்களுக்கு தோன்றியது. அப்போதைய இந்திய அணியில் நிறைய சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருந்தனர். கோலி மட்டுமே இளம் வீரராக இருந்தார்.
அந்த தருணத்தில் அவருடைய ஸ்டம்பை தகர்த்த பிறகு எங்களுக்கு சிறந்த வாய்ப்பு இருப்பதாக தோன்றியது. அதனால் அவரை எளிதாக வெளியேற்றிய பிறகு “இனி உன்னையோ உனது பெயரையோ நாங்கள் பார்க்கவோ கேட்கவோ மாட்டோம்” எனக் கூறினேன். ஆனால் அதற்கு பிறகு தலைசிறந்த வீரராக உருவெடுத்த கோலி எங்களின் எண்ணத்தை பொய்யாக்கிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விக்கெட் கீப்பராக இருந்த பாரேசி சச்சின் டெண்டுல்கருடன் விளையாடியது குறித்து பேசுகையில், “மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்களால் நிரம்பியிருந்தது. எல்லா இடங்களிலும் நீல வண்ணம் மட்டுமே பூசப்பட்டிருந்தது. ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்று தலைசிறந்த சச்சின் டெண்டுல்கரை என் முன்னால் பார்த்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது” என்று கூறியுள்ளார்.