‘கோலி சொன்ன அந்த வார்த்தை’ – போட்டிக்கு பிறகு விராட்டை புகழ்ந்து தள்ளிய நவீன் உல் ஹக்!

ஐபிஎல் தொடரில் தொடங்கிய விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் மோதல் உலகக்கோப்பை போட்டியில் முடிவுக்கு வந்துள்ளது.

நேற்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய மோதலில் பல உலக சாதனைகளை படைத்த ரோகித் சர்மா, தன்னுடைய சிறந்த உலகக்கோப்பை பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா என பல சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்றது.

ஆனால் இதை எல்லாவற்றையும் கடந்து போட்டியில் ரசிகர்கள் பெரிதாக பாராட்டிவருவது கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் இருவருக்கும் இடையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பற்றிதான். கடந்த பல மாதங்களாக சமூக வலைதளங்களில் அனல் பறந்த இந்த இரண்டு வீரர்களின் ரைவல்ரியானது ஒரு அற்புதமான புரிதலின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

நேருக்கு நேர் சந்தித்து கொண்ட கோலி-நவீன்!
கடந்த 2023 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதலின் போது, விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பின்னர் மெண்டர் கவுதம் கம்பீர் தலையிட அதிக நேரம் களத்திலேயே நீடித்தது. பின்னர் இது களத்திற்கு வெளியேயும் சமூக வலைதளத்திலும் தொடர்ந்தது.

கோலியின் ரசிகர்கள் நவீனை சீண்டிக்கொண்டே இருக்க, அவரும் பதிலுக்கு பல கருத்துகளை பதிவிட மோதல் அனையாமல் மேலும் மேலும் சூடுபிடித்தது. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக முற்றுபெறாமல் இருந்த ரைவல்ரிக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் கோலி மற்றும் நவீன் உல் ஹக்.

அதன்படி நேற்றைய போட்டியில் தன்னுடைய சொந்த மைதானத்தில் களமிறங்கிய விராட் கோலி, முதல் பந்தையே IPL மோதலில் ஈடுபட்ட நவீன் உல் ஹக்கிற்கு எதிராக சந்தித்தார். ஒரு பெரிய ரைவல்ரியை வைத்திருக்கும் இந்த இரண்டு வீரர்கள் களத்தில் சந்தித்ததும், மைதானத்தில் கூடியிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் ”கோலி, கோலி, கோலி” என கத்த ஆரம்பித்தனர். ஆனால் களத்தில் நடந்தது என்னவோ வேறாக இருந்தது. ஓவர் முடிந்ததும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொண்ட கோலி மற்றும் நவீன் இருவரும் கைகளை கொடுத்து HUG செய்துகொண்டனர்.

கடந்த பல மாதங்களாக சமூக வலைதளங்களில் ஓயாமல் இருந்த கருத்துமோதல்கள், நவீன் மீதான கோலி ரசிகர்களின் விமர்சனங்கள் என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த இந்த சம்பவம், மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நேற்றைய போட்டியின் இறுதியில், 6 பவுண்டரிகளை விரட்டி அரைசதம் அடித்த விராட் கோலி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

கோலி சிறந்த மனிதர்! – புகழ்ந்து தள்ளிய நவீன்
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு விராட் கோலி பற்றியும், நடந்த உரையாடல் பற்றியும் நவீனிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “கோலி ஒரு சிறந்த மனிதர், ஒரு நல்ல வீரர், நாங்கள் கைகுலுக்கிக்கொண்டோம். எங்களுக்குள் போட்டி என்பது எப்போதும் களத்தில் இருக்குமே தவிர, களத்திற்கு வெளியே எப்போதும் இருந்ததில்லை. சுற்றியிருக்கும் மக்கள் அதை பெரிதாக்கிவிட்டார்கள்.

ஒருவேளை அவரை பின்தொடர்பவர்களுக்கு அந்த விஷயங்கள் தேவையாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது நாங்கள் அதை முடித்துவிட்டோம். கோலி என்னிடம் இதை இதோடு முடித்துக்கொள்ளலாம் என்று கூறினார், நானும் முடித்துக்கொள்ளலாம் என்றேன். பின்னர் நாங்கள் கைகுலுக்கிவிட்டு கட்டிப்பிடித்தோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *