அசைக்க முடியாத வரலாறு..பாகிஸ்தானை 8வது முறையும் சாய்த்த இந்திய அணி-ஒரே போட்டியில் நிகழ்ந்த சாதனைகள்!

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அபார வெற்றிபெற்று முதல் இடத்துக்கு முன்னேறியது.

உலகக்கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் மோதல்
13வது ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரின் 12வது லீக் போட்டி, இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி நடைபெற்றது. இதில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் களம் கண்டன. இரு அணிகளுமே முந்தைய ஆட்டங்களில் வெற்றிபெற்று சம பலத்துடன் இருந்த நிலையில், இந்தப் போட்டி, ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

களமிறங்கிய ஷுப்மன் கில்
இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. முன்னதாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த இரு போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஷுப்மன் கில் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டார். இஷான் கிஷனுக்கு ஓய்வளிக்கப்பட்டது.

191 ரன்களை மட்டுமே எடுத்த பாகிஸ்தான்
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றத்தைக் கண்டது. எனினும், அவ்வணியின் கேப்டன் பாபர் அசாம் (50) மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷ்வான் (49) ஆகிய இணை நல்ல ரன்களை எடுத்தது. எனினும், அவர்கள் இருவரும் பெவிலியன் திரும்பிய பிறகு, பின்னால் வந்த பேட்டர்கள் அனைவரும் நிலைத்து நின்று விளையாடாததால், பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் தவிர மற்ற எல்லா பவுலர்களுமே தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதிரடியாக விளையாண்ட ரோகித் சர்மா
பின்னர் இலகுவான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித்தும், ஷுப்மன் கில்லும் அதிரடியாகவே ஆடத் தொடங்கினர். எனினும் கில், கோலி ஆகியோர் விரைவாகவே விக்கெட்டை தாரை வார்த்தாலும், ரோகித்தும், ஸ்ரேயாஸும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்தப் போட்டியில் ரோகித் செஞ்சுரி அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர், 63 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 86 ரன்கள் எடுத்திருந்தார்.

இன்றைய போட்டியிலும் சாதனை நிகழ்த்திய சர்மா
இன்றைய போட்டியில் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் 300 சிக்ஸர்களைக் கடந்தார். தவிர, உலகக் கோப்பை இன்னிங்ஸில் அதிக முறை ஐந்துக்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலிலும் ரோகித் சர்மா இணைந்தார். ஏற்கெனவே டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் தலா 3 முறை அடித்துள்ளனர். அந்தச் சாதனையை ரோகித் இன்று சமன் செய்துள்ளார். அவரும் தலா 3 முறை 5க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இந்திய அணியை வெற்றிபெற வைத்த ஸ்ரேயாஸ் – ராகுல்
பின்னர், ஸ்ரேயாஸுடன் இணைந்தார், கே.எல்.ராகுல். இந்த இணை இறுதிவரை களத்தில் நின்றதுடன் இந்திய அணியையும் வெற்றிபெற வைத்தது. முடிவில் ஸ்ரேயாஸ் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற வைத்ததுடன், அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். அவர், 62 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்தார். கே.எல்.ராகுல் 19 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்து வெற்றிபெற்றதுடன், புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்துக்கு முன்னேறியது. நியூசிலாந்தைப்போல், இந்திய அணியும், தாம் சந்தித்த 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று வீறுநடை போட்டு வருகிறது.

இந்திய அணி படைத்த சில சாதனைகள்
இந்தப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அவ்வணியிடம் தோல்வியைச் சந்திக்காத அணியாக வலம் வருகிறது. ஏற்கெனவே உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இலங்கையை 8 முறை வீழ்த்தியுள்ளது. அந்த சாதனையை அதே பாகிஸ்தானுக்கு எதிராக இன்று, இந்தியா சமன் செய்துள்ளது.

கடைசி 8 போட்டிகளில் வெற்றி
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே, கடைசியாக நடைபெற்ற 8 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது. அது வெற்றிபெற்ற ரன் மற்றும் விக்கெட் வித்தியாசங்களைப் பார்க்கலாம். முதல் போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்திலும் 3வது போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. அடுத்து 4வது போட்டியில், 126 பந்துகள் மீதமிருக்க, 8 விக்கெட் வித்தியாசத்திலும், 5வது போட்டியில் 63 பந்துகள் மீதமிருக்க 9 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றுள்ளது. தொடர்ந்து 6வது போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்திலும் 7வது போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் 117 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது
இன்றைய போட்டியில் சிறந்த ஆட்டக்காரர் விருதை, சிறப்பாகப் பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா பெற்றார். இதற்குமுன்பு, நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கான போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 3 முறை (1992, 2003, 2011) பெற்றுள்ளார்.

அவரைத் தொடர்ந்து 1996இல் நவ்ஜோத் சிங்கும், 1999இல் வெங்கடேச பிரசாத்தும், 2015இல் விராட்கோலியும், 2019இல் ரோகித் சர்மாவும் பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டியில் பும்ரா, 7 ஓவர்களை வீசி வெறும் 19 ரன்களை மட்டுமே வழங்கி, 2 விக்கெட்களை அறுவடை செய்திருந்தார். அதில் ஒரு மெய்டன் ஓவரும் அடக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *