ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்த ரோகித்! இந்திய அணியின் புதிய அதிரடி!

பல்வேறு உலகசாதனைகளை நெதர்லாந்து அணியுடனான போட்டியில் முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா.

2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடரின் கடைசி லீக் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணியும் நெதர்லாந்து அணிகயும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஜோடி நெதர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தது. பந்துகள் அனைத்தும் பவுண்டரி லைனுக்கும், அதைத் தாண்டியும் பறந்தன. முதல் பத்து ஓவர்களிலேயே இந்திய அணி 90 ரன்களைக் குவித்தது. சுப்மன் கில் 32 பந்துகளில் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 54 பந்துகளில் 61 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடக்கம். இதன் மூலம் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்துள்ளார் ரோகித் சர்மா.

ஓராண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோகித் சர்மா உலகசாதனை படைத்துள்ளார். நடப்பாண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் அவர் 59 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டிவில்லியர்ஸ் 58 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்தது. 2019 ஆம் ஆண்டு க்றிஸ் கெயில் 56 சிக்ஸர்களை அடித்துத் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பைத் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலிலும் ரோகித் முதலிடத்தில் உள்ளார். நடந்துவரும் உலகக்கோப்பைத் தொடரில் அவர் 23 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இயான் மர்கன் 22 சிக்ஸர்களை அடித்து இரண்டாவது இடத்திலுள்ளார். 2015 ஆம் ஆண்டு 21 சிக்ஸர்களை அடித்த டிவில்லியர்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதுவரை நடந்த உலகக்கோப்பைகளில் அதிக ரன்களை அடித்த இந்திய கேப்டன்களின் பட்டியலிலும் ரோஹித்சர்மா முதலிடம் பிடித்துள்ளார். நடப்பாண்டு நடக்கும் உலகக்கோப்பையில் அவர் 503 ரன்களைக் குவித்துள்ளார். இரண்டாவது இடத்தில் சவ்ரவ் கங்குலி உள்ளார். அவர் 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் 465 ரன்களைக் குவித்துள்ளார்.

உலகக்கோப்பையில் அதிகமுறை 500+ ரன்களை எடுத்தவர்கள் பட்டியலிலும் ரோகித் சர்மா இணைந்தார். இதற்கு முன் சச்சின் 1996 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் 500+ ரன்களை அடித்திருந்தார். ரோகித் சர்மா 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 500+ ரன்களைக் குவித்துள்ளார். அதேபோல் தொடர்ச்சியாக இருமுறை 500+ ரன்களை அடித்தவர் என்ற சாதனை ரோகித் படைத்துள்ளார்.

இந்த உலகக்கோப்பையில் அதிகமுறை 50+ பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களாகவும் இந்தியர்களே உள்ளனர். விராட் – ஸ்ரேயாஸ் கோடி 4 முறை 50+ ரன்களை எடுத்துள்ளது. அதேபோல் ரோகித் – கில் ஜோடியும் 4 முறை 50+ பார்ட்னர்ஷிப்களை அடித்துள்ளது.

42 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அரைசதம் அடித்து விளையாடி வருகின்றனர்.

உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணியின் டாப் 5 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர். அதேபோல், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது முறையாக இந்தச் சாதனை பதிவு செய்யப்படுகிறது. இதற்கு முன்பாக இந்திய அணிக்கு எதிராக 2013 மற்றும் 2020 ஆண்டுகள் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *